மூன்றாவது அலை குறித்த பயம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

By செய்திப்பிரிவு

மூன்றாவது அலை குறித்த பயம் தேவையில்லை என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் மறுசீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை இன்று (ஜூலை 08) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்துவைத்து, மருத்துவ மாணவர்களுக்கான ஓட்டப் பந்தயத்தைத் தொடங்கி வைத்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"ராஜீவ் காந்தி மருத்துவமனையைப் பொறுத்தவரையில் கரோனாவுக்கு இதுவரை 55,052 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருக்கின்றனர். கரோனா சிகிச்சைக்குச் சிறப்பான வகையில் மருத்துவ சிகிச்சை இம்மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ளது. 2,600 பேர் சிகிச்சை பெறும் அளவுக்குப் படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொற்று வேகமெடுத்தபோது ஒரு படுக்கைகூட கிடைக்காத நிலையில், தற்போது 115 பேர் மட்டுமே கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரும்பூஞ்சை நோய்க்கு இம்மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்தில் ஒரு பங்கு என்ற அளவில் இருந்துவருகின்றனர். கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு இம்மருத்துவமனையில் 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 216 பேர் நலம் பெற்று இல்லம் திரும்பியுள்ளனர். கரும்பூஞ்சை நோய்க்குத் தமிழகம் முழுவதும் 3,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மருத்துவமனையில் சிறப்பாக சேவை புரியும் மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மனதாரப் பாராட்டுகிறது.

மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராகவிருந்த ஹர்ஷவர்தனிடம் ஏற்கெனவே வாங்கிய அனுமதியின்படி 9-7-2021 மாலை 3 மணிக்கு சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் அமைச்சரவையில் மாற்றத்திற்குப் பிறகு புதியதாகப் பொறுப்பேற்றவர்களுடன் இன்று மாலைக்குள் பேசி ஏற்கெனவே அளித்த உத்தரவுப்படி சந்திக்கலாம் என்றால், எய்ம்ஸ், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றி பல்வேறு விவரங்களை எடுத்துரைப்போம்.

இல்லையென்றால் திட்டமிட்டபடி துறையின் செயலாளர் இன்று மாலை டெல்லி சென்று மத்திய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர், இணைச் செயலாளர் போன்ற அலுவலர்களைச் சந்தித்து விவாதிக்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்து எடுத்துரைப்பார்.

கொசு ஒழிப்பில் சென்னைப் பெருநகர மாநகராட்சி சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ட்ரோன்கள் மூலம் அனைத்து ஆறுகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்புரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

டெங்குவுக்கு கடந்த ஜனவரியில் 402 பேரும், பிப்ரவரியில் 618 பேரும், மார்ச் மாதத்தில் 684 பேரும், ஏப்ரலில் 249 பேரும், மே மாதத்தில் 55 பேரும், ஜூன் மாதத்தில் 54 பேரும், ஜூலையில் 28 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 2090 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எந்த வகையான வைரஸும் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதற்கு ஐசிஎம்ஆர், உலக சுகாதார நிறுவனம் ஆகியவை வழிகாட்டு நெறிமுறைகளை அளித்திருக்கின்றன. அந்த வகையில், வரும் முன்னர் தடுக்கவும், வந்த பிறகு காப்பாற்றுவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த அன்றைக்கு இருந்த ஆக்சிஜன் உற்பத்தி என்பது 230 மெட்ரிக் டன்னாக கையிருப்பு இருந்தது. தற்போது கையிருப்பு 900 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. தமிழக முதல்வரின் வேண்டுகோளையேற்று ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர் போன்றவை தேவையான அளவில் சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் பல்வேறு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வழங்கியிருக்கின்றனர். அதனால் மூன்றாவது அலை குறித்த பயம் தேவையில்லை.

மத்திய அரசிடமிருந்து இதுவரை தமிழகத்துக்கு வரப்பெற்ற தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,59,26,050. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,58,402. கையிருப்பில் 1,76,730 தடுப்பூசிகள் உள்ளன. இந்தத் தடுப்பூசிகள் தேவை அதிகமாக உள்ள மாவட்டங்கள் மற்றும் அதிகமாக பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுச் செலுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டுகின்றனர். இம்மாதத்துக்குரிய தொகுப்பில் ஜூலை 11 அன்றுதான் அடுத்த தடுப்பூசிகள் அனுப்புவதாகச் சொல்லியிருக்கின்றனர். இன்று டெல்லி செல்லும் துறையின் செயலாளரும் தடுப்பூசிகள் தேவைகள் குறித்து எடுத்துரைக்க இருக்கிறார்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்