தமிழகம்

கூட்டுறவு சங்கங்கள் கலைப்புக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கி.மகாராஜன்

கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுக்களை கலைக்க தடை விதிக்கக்கோரி தாக்கலான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி அன்பில் கூட்டுறவு சங்கத் தலைவர் அருண் நேரு உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வுக்கு வந்திருந்த போது, தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகக் குழுக்களை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் 2018-ல் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழுக்களின் பதவி காலம் 2023 வரை உள்ளது. முறைப்படி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழுக்களை மிரட்டும் வகையில் அமைச்சரின் பேட்டி அமைந்துள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் தன்னாட்சி அமைப்பு. தனி சட்டம் , விதிகள் உள்ளன. இதனால் நிர்வாகக்குழுக்களை கலைக்க அவசியம் இல்லை. எனவே, கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழுக்களை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த தடை விதித்தும், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பணி செய்ய இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுக்களை கலைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடுகையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வில் கூட்டுறவு சங்கங்களின் சில முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.

இதனால் முறைகேடு நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக்குழுக்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார்.

இதையடுத்து, வழக்கின் தீர்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT