கடந்த 1998-ம் ஆண்டு அக்.9-ம் தேதி ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பான சான்ட்ரோ காரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, முதல்வர் கருணாநிதி, ஹூண்டாய் மோட்டார் நிறுவன தலைவர் மாங் யு சுங். உடன், கொரிய அம்பாசிடர் டே வா சோய், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மேலாண் இயக்குநர் ஒய்.எஸ்.கிம் மற்றும் முரசொலிமாறன் எம்பி. ஆகியோர் உள்ளனர். படம் உதவி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம் 
தமிழகம்

தந்தை கருணாநிதி தொடங்கி வைத்த ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்தார் மகன் மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் கார் நிறுவனம் பல்வேறு வகையான கார்களை தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவிலும் இதன் கிளைகள் அமைந்துள்ள நிலையில், கடந்த 1996-ம்ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக வெளிநாட்டுக் கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் கால் பதித்தது. அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி. மத்திய அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் முரசொலிமாறன்.

இவர்களின் தீவிர முயற்சியால் 1996-ம் ஆண்டிலேயே ரூ.3,500கோடி என்ற பெரிய அளவு முதலீட்டில் சென்னை ஸ்ரீபெரும்புதூரைஅடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அமைந்தது ஹூண்டாய் கார்தயாரிப்பு தொழிற்சாலை. இதற்காக 500 ஏக்கர் நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இந்த கார் தொழிற்சாலைக்கு 1996-ம் ஆண்டு டிச.10-ம் தேதி அடிக்கல் நாட்டினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே இந்த நிறுவனத்தில் பெரும்பான்மை வேலைவாய்ப்பு வழங்கப்படுவதற்கான உத்தரவாதத்தையும் ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து அப்போதே பெற்றுத் தந்தார்.

அடிக்கல் நாட்டிய 2 ஆண்டுகளில் அதாவது 1998 அக்.9-ம்தேதி ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலையில், ரூ.2,400 கோடி மதிப்பிலான பிரிவில் பயணிகள் காரான‘சான்ட்ரோ’ கார் தயாரிப்பை அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, முதல்வர் கருணாநிதி மற்றும் முரசொலிமாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதன்பின் கடந்த 1999-ம் ஆண்டுஹூண்டாய் நிறுவனம் தனது‘அக்சென்ட்’ காரை தயாரித்து வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றதுடன், வாடிக்கையாளர்கள் இருவருக்கு காரின் சாவிகளையும் வழங்கி பாராட்டினார். அப்போது இந்தியாவில் ஹூண்டாய் கார்கள் தயாரிப்பு 50 ஆயிரத்தை தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1998-ல் தொடங்கி இதுவரை 22 ஆண்டுகளில் 11 வகையான கார்களை தயாரித்துள்ள ஹூண்டாய் நிறுவனம், 190-க்கும் மேற்பட்டஉலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும், இதுவரை 99 லட்சத்து 99 ஆயிரத்து 999 கார்களை தயாரித்துள்ள இந்நிறுவனம், நேற்று ஒரு கோடியாவது காரை தயாரித்தது.

22 ஆண்டுகளுக்குப் பிறகு

இதற்கான அறிமுக விழா இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத் தார்.

22 ஆண்டுகளுக்கு முன்பு ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்துக்கு வர அடிகோலியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது அந்நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்துள்ளார் அவரின் மகனும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT