புதுச்சேரியில் 50 நாட்களுக்குப் பிறகு பதவியேற்பு முடிந்தும் தங்களுக்கு துறைகள் ஒதுக்காததால், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுவையில் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ரங்கசாமி முதல்வராக பதவியேற்று, நீண்ட இழுபறிக்குப் பிறகு என்ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இவர்களுக்கு ஆளுநர் தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2-வது நாளாக நேற்று அனைத்து அமைச்சர்களும் பேரவையில் உள்ள தங்கள் அறைகளுக்கு வந்து அமர்ந்திருந்தனர். ஆனால் அமைச்சர்களுக்கு இதுவரை துறைகள் ஒதுக்கப்படவில்லை. தங்களுக்கான துறைகள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, “முதல்வர் ரங்கசாமிதான் அனைத்தும் முடிவு செய்வார்” என்ற ஒரே வார்த்தையை தெரிவிக்கின்றனர்.
பாஜக தரப்பில் விசாரித்த போது, “முதல்வர் என்ற அடிப்படையில், தானே துறைகளை ஒதுக்குவதாக ரங்கசாமி கூறிஇருந்தார். பாஜகவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் துறைகளை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டது. மேலிடத்தில் இருந்து துறைகள் ஒதுக்கீடு பற்றி முதல்வரிடம் பேசுவார்கள்” என்று தெரிவித்தனர்.
அதேநேரத்தில் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் தரப்பில் கூறுகையில், “நமச்சிவாயத்துக்கு உள்துறை, லட்சுமிநாராயணனுக்கு சுகாதாரத் துறை, தேனீஜெயக்குமாருக்கு உள்ளாட்சித்துறை, சந்திர பிரியங்காவுக்கு கல்வித் துறை, சாய் சரவணக்குமாருக்கு சமூக நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் தெரிவிப்பார்” என்று குறிப்பிடுகின்றனர்.