தமிழகம்

மிதக்கும் தலைநகரம்: தென்சென்னையை சூழ்ந்தது வெள்ளம்

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து பெய்த கன மழையால், தென்சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலைகளால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கன மழை பெய்தது.

இதனால், சென்னை தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. சென்னை கிழக்கு தாம்பரத்தில் சேலையூர், சிட்லபாக்கம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதேபோல் மேற்கு தாம்பரத்தில் முடிச்சூர், கிருஷ்ணா நகர், லட்சுமி நகர், பார்வதி நகர் முதல் மண்ணிவாக்கம் வரை சாலையில் தண்ணீர் ஓடுகிறது. அப்பகுதியில் பெரும்பாலான வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.

இதுமட்டுமன்றி பல்லாவரம், ராஜ கீழ்ப்பாக்கம், குரோம்பேட்டை போன்ற பகுதிகளிலும் வெள்ள நீர் சாலைகளில் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மீனம்பாக்கம், ஆலந்தூர் சிமென்ட் சாலையில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கிண்டி சர்தார் வல்லபாய் படேல் சாலையில் இடுப்பளவு தண்ணீர் சென்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும், சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.

மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலை தண்ணீரில் மூழ்கியதால், வாகனங்கள் அனைத்தும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, செம்மஞ்சேரி ஏரி, பள்ளிக்கரணை ஏரி ஆகியவற்றிலிருந்து தண்ணீர் வெளியேறியதால், பழைய மகாபலிபுரம் - தாம்பரம் சாலை, மேடவாக்கம் – ஈச்சங்காடு சாலை, பல்லாவரம் ரேடியன்ட் சாலை, ஆகியவை துண்டிக்கப்பட்டன.

சென்னை தாம்பரம் சானட்டோரியம், மீனம்பாக்கம், தில்லை கங்கா நகர், பழவந்தாங்கல் ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகளில் நேற்று பெய்த கன மழையால் மீண்டும் தண்ணீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT