தமிழகம்

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார், ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை: போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார், ஆம்னி பேருந்துகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குரவத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையரகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பரவலை தடுக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் முதல்வரின் உத்தரவுப்படி, வரும் 10-ம் தேதி (நாளை) அதிகாலை 4 மணி முதல் 24-ம் தேதி அதிகாலை 4 மணி வரை 2 வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதையொட்டி, பொதுமக்கள், தனியார் துறை தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உரியமுன்னேற்பாடுகளை செய்துகொள்வதற்காக 8, 9-ம் தேதிகளில் கடைகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த 2 நாட்களில் மக்கள்சொந்த ஊருக்கு செல்ல வசதியாகஅனைத்து வகையான போக்குவரத்துக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

அதிக கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி, ரூ.10 ஆயிரம் வரைஅபராதம், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். வாகனம் சிறை பிடிக்கப்பட்டு, உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே, தனியார்பேருந்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இந்த பேரிடர் காலத்தில்சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு, முறையான கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவிடப்படுகிறது.

SCROLL FOR NEXT