புதுச்சேரியில் 14-வது சட்டப்பேரவை கலைப்பு: புதிய அரசு பதவியேற்பு விழா பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழாவுக்காக சட்டப்பேரவை தூய்மைப்படுத்தப்பட்டு, தயாராகி வருகிறது.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 2 இடங்களிலும், திமுக 6 தொகுதியிலும், சுயேச்சைகள் 6 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

16 இடங்களில் வெற்றி பெற்றுள்ள என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே, புதுச்சேரியின் 14-வது சட்டப்பேரவை, துணை நிலை ஆளுநரின் ஆணைப்படி மே.3-ம் தேதி கலைக்கப்பட்டதாக புதுச்சேரி சட்டப் பேரவைச் செயலகத்தின் செயலர் முனிசாமி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தின் 15-வது சட்டப் பேரவை, ரங்கசாமி தலைமையில் அமைய உள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தரப்பில் ரங்கசாமி முதல்வராகிறார். முன்னாள் அமைச்சர்கள் 4 பேரில்இருவருக்கு அமைச்சர் பதவியும்,ஒருவர் சட்டப்பேரவைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பாஜக தரப்பில் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏ மற்றும் கட்சி பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆகிய 3 பேரில் இருந்து 2 அமைச்சர் பதவியும், ஒருவருக்கு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியும் வழங்கப்படலாம் என பேசப்பட்டு வருகிறது.

ரங்கசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா மே 7 அல்லது 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE