கிருஷ்ணகிரி அருகே பாறை குகையில் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் உள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே சென்னானூர் கிராமத்தில் நிழல் குண்டு என்றழைக்கப்படும் பாறை குகையில் உள்ள ஓவியங்களை, கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக காப்பாட்சியர் கூறியதாவது:
இந்த ஓவியங்கள் 1500 ஆண்டு களுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள். இப்பாறை ஓவியத்தில் பல தொகுதிகள் உள்ளன. இதில் குறியீடுகளும் மனித உருவங்களும் அடங்கும். நடுவில் உள்ள ஓவியத்தொகுதியில் பெண் நேராகவும், அவளுக்கு இருபுறமும் இரண்டு ஆண்கள் தலைகீழாகவும் காட்டப்பட்டுள்ளனர்.
இடப்பக்க ஆண், உருவத்தில் பெரிதாய் உள்ளது. இதற்கு மேல் சூலம், உடுக்கை காட்டப்பட்டுள்ளன. வலப்பக்கம் சற்று கீழே கைகளை தூக்கி மனித உருவம், அதன் இடுப்பில் வாள், அதனை இன்னொருவன் தொடுவதுபோல் உள்ளது. இதற்கு நேர் இடப்புறம் நடந்துசெல்லும் உருவமும், அதற்குக் கீழே ஆணும் பெண்ணும் உள்ளன. ஆணின் இடையில் வாள், கால்களை அகல வைத்து வலது கையை தூக்கி இடது கையால் அருகில் உள்ள பெண்ணை பிடித்திருக்கிறான். இவற்றை தவிர்த்து ஆங்காங்கே சில மனித உருவங்கள் பாண்டில் விளக்கு, முக்கோணம், சூலம் போன்ற குறியீடுகள் தென்படுகிறது என்றார்.