ஸ்டெர்லைட் தயாரிக்கும் ஆக்சிஜன் மத்திய அரசுக்கே; தமிழகத்துக்கு அவசியம் தேவை என்றால் அணுகலாம்: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவைக்கு முன்னுரிமை என்பதை மறுத்து மத்திய அரசிடம் ஆக்சிஜனை ஒப்படைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஆக்சிஜன் அவசியம் தேவை என்றால் மீண்டும் அணுகித் தீர்ப்பை மாற்றக் கோரலாம் என்று தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி மடியும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்சிஜன் மட்டும் தயாரித்து அளிக்கிறோம் என வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

ஆனால், ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களும், தமிழக அரசும் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்தன. பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. இந்நிலையில் அரசே ஆலையை ஏற்று நடத்தலாமே என உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.

இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு நேற்று கூட்டியது. ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே அனுமதி, மின்சாரத்தைத் தமிழக அரசு மட்டுமே வழங்க வேண்டும், இதை வைத்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடவடிக்கை, எதிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் செயல்பட அனுமதி வழங்கக் கூடாது, 4 மாதத்திற்கு மட்டுமே தற்காலிக அனுமதி, ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்து தமிழகப் பயன்பாட்டுக்குப் போக வெளி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஆக்சிஜனை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம் ஏற்கப்படவில்லை. ஆனாலும் தீர்ப்பில் சில விதிவிலக்குகளை நீதிமன்றம் அளித்துள்ளது.

அதன்படி ஒருவேளை தமிழகத்துக்கு ஆக்சிஜன் தேவை அதிகம் எனும் நிலை வந்தால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.

தீர்ப்பு வருமாறு:

*ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளிக்கிறோம். இந்த உத்தரவு தற்போதைய தேசிய சூழலைக் கருத்தில் கொண்டே பிறப்பிக்கப்பட்டது

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளித்த தற்போதைய இந்த உத்தரவு வேதாந்தா நிறுவனத்துக்கு வரும் காலத்தில் ஆதரவாக அமையாது.

* இந்த உத்தரவைக் கொண்டு எந்த வகையிலும் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட்டில் தாமிர உற்பத்தி செய்யவோ, அதற்காக ஆலையை இயக்கவோ அனுமதி இல்லை.

* ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனைத் தமிழகத்துக்குத் தரவேண்டும் அல்லது முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு கோருகிறது. ஆனால், தமிழகத்தில் தற்போது மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் என்பது தேவைக்கேற்ப உள்ளது. எனவே, வரும் காலத்தில் ஒருவேளை பற்றாக்குறையோ அல்லது தேவை அதிகரித்தாலோ அப்போது உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு அணுகலாம்.

இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்