கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என, ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஏப். 26) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு மருத்துவம் அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
கரோனா பாதிப்புக்கு ஏற்ற வகையில் புதிய மருத்துவர்களை நியமிக்காமல், ஏற்கெனவே பணியில் உள்ள மருத்துவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவது சிக்கலை உருவாக்கும்.
தமிழ்நாட்டில் தினசரி கரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் 500க்கும் குறைவாக இருந்த தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 15 ஆயிரத்து 659 ஆக அதிகரித்திருக்கிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவம் பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 180 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 4,009 என்ற அளவில்தான் இருந்தது. கடந்த 25 நாட்களில் கரோனாவுக்கு மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை 25 மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
கரோனா முதல் அலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி தான் உச்சகட்டத்தை எட்டியது. அப்போது தமிழ்நாட்டில் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 896 மட்டும்தான். இப்போது மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை அதைவிட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
கரோனா இரண்டாம் அலை தாக்கத் தொடங்கிய பிறகு 350 மருத்துவர்கள் மட்டுமே தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நிச்சயம் போதுமானதல்ல.
மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் கடுமையான பணிச்சுமைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். உதாரணமாக சென்னையை எடுத்துக் கொண்டால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் மொத்தம் 4,368 படுக்கைகள் உள்ளன. இவற்றில் இப்போது 3,444 பேர் மருத்துவம் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவம் அளிக்க குறைந்த எண்ணிக்கையில்தான் மருத்துவர்கள் உள்ளனர். இதனால் 6 மணி நேரம் பணியாற்றும் ஒரு மருத்துவர் 60 முதல் 80 நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.
ஒரு மருத்துவர் ஓய்வே இல்லாமல் சிகிச்சை அளித்தால் கூட ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 14 பேருக்கு மருத்துவம் அளிக்க வேண்டும். ஒரு நோயாளியின் உடல்நிலையை ஆய்வு செய்து 5 நிமிடத்திற்குள் மருத்துவம் அளிக்க வாய்ப்பே இல்லை. ஓய்வு இல்லாமல் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றும்போது நோயாளிகளுக்குத் தரமாக மருத்துவம் அளிக்க முடியாது. கரோனா முதல் அலையின்போது அரசு மருத்துவர்கள் இரு வாரம் தொடர்ந்து பணியாற்றினால், ஒரு வாரம் தனிமைப்படுத்தி ஓய்வளிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது
இதனால் மருத்துவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையைப் போக்க அதிக எண்ணிக்கையில் தற்காலிகமாக மருத்துவர்களைக் கூடுதலாக நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த தகுதியும், திறமையும் கொண்ட இளைஞர்களும், பெண்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுக்கு கவுரவமான ஊதியம், பணி நிலைப்பு செய்வதற்கான உத்தரவாதம் உள்ளிட்ட வாக்குறுதிகளைத் தமிழக அரசு அளிக்கும் நிலையில், அவர்கள் தமிழக அரசின் கரோனா ஒழிப்புப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்வருவார்கள்.
இன்றைய சூழலை ஓர் அவசர காலமாகக் கருதி தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்த மருத்துவர்கள் அனைவரும், கரோனா ஒழிப்புப் போரில் ஈடுபடுவதற்கு முன்வர வேண்டும்.
எனவே, புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, புதிய மருத்துவர்களை விரைந்து நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைத்து, போதிய ஓய்வை வழங்கி அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயை ஒழிப்பதற்கான போரில் தமிழக அரசு விரைவாக வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.