ஒரே நம்பர் பிளேட்டில் 2 இன்னோவா கார்கள்; அதிர்ச்சி அடைந்த கார் உரிமையாளர்கள்: சிவகங்கை போக்குவரத்து அதிகாரிகள் குழப்பம்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஒரே நம்பர் பிளேட்டில் உள்ள இரண்டு இன்னோவா கார்கள் வந்ததால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மோசடி கும்பலைப் பிடிக்க போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி அழகாபுரத்தைச் சேர்ந்த முத்துதுரை, தூத்துக்குடியைச் சேர்ந்த உமாதேவியின் பழைய இன்னோவா காரை (டி.என்.69 ஏஎம் 4777) ரூ.10 லட்சத்திற்கு கடந்த வாரம் வாங்கினார். கார் உரிமையாளரின் பெயரை மாற்றுவதற்காக முத்துதுரை தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்றனர். ஆனால், இதே நம்பர் பிளேட் உள்ள காரை சிவகங்கையைச் சேர்ந்த முத்துகணேஷ் என்பவருக்கு சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துதுரை, காரை விற்பனை செய்த உமாதேவியை அழைத்துக் கொண்டு சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தார். வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் புகார் தெரிவித்துக் கொண்டிருந்தபோதே முத்துகணேஷ் என்பவரும் காரில் வட்டாரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வந்திருந்தார்.

ஒரே சமயத்தில் இரு கார்களையும் பார்த்த அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மேலும் 2 கார்களின் நிறம், நம்பர், இன்ஜின் நம்பர், ஆவணங்களை ஆய்வு செய்தபோது ஒரே மாதிரியாக இருந்தன. மேலும் விசாரணையில், 2014-ம் ஆண்டில் இன்னோவோ காரை வாங்கியதாகவும், தற்போது புது கார் வாங்குவதற்காக இந்த காரை விற்பனை செய்ததாகவும் உமாதேவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், மதுரை தரகர் மூலம் தூத்துக்குடி தனியார் கார் விற்பனை நிலையத்தில் காரை 20 தினங்களுக்கு முன்பு வாங்கியதாக முத்துகணேஷ் தரப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து எது போலி, உண்மையானது என்பதை விசாரிக்க வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் கூறுகையில், ‘‘புகார் வந்தபிறகு தான் எங்களுக்கே ஒரே நம்பர் பிளேட்டில் 2 கார்கள் இருப்பது தெரியவருகிறது. ஆவணங்கள் சரியாக இருந்ததால் பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆவணத்தை அச்சு அசலாகப் பிரதி எடுத்து கொடுத்துள்ளனர்.

இதனால் ஆவணம் போலி என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு ஆவணங்களிலும் காரின் முதல் உரிமையாளர் பெயர் உமாதேவி என்றுதான் உள்ளது. ஆனால், புகைப்படம் மட்டும் போலி ஆவணத்தில் வேறொரு பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளோம். மோசடி கும்பல் விரைவில் பிடிபடுவர் ’’ என்று கூறினார்.

பழைய கார்களை வாங்குவோர் உஷார்

இதுகுறித்து கார் தரகர் ஒருவர் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் ஒரே நம்பர் பிளேட்டில் ஏராளமான போலி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதனை ஒரு கும்பல் செய்து வருகிறது. அந்த கும்பல் கார் பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வேறு ஏதாவதொரு வகையில் காரின் அசல் ஆவணங்களைப் பெற்று, அப்படியே நகல் எடுத்து விடுகின்றன. பிறகு அந்த ஆவணங்கள் அடிப்படையில் ஒரே நம்பர் பிளேட்டில் திருட்டு வாகனங்களை விற்பனை செய்து விடுகின்றன.

பலரும் தாங்கள் வாங்கிய பழைய காரைப் பெயர் மாற்றம் செய்வதில்லை. இதனால் உண்மை வெளிவருவதில்லை. நெல்லை, தூத்துக்குடி, சென்னை, கேரளா போன்ற இடங்களில் இதுபோன்று போலி ஆவணங்கள் மூலம் கார்களை விற்பனை செய்யும் கும்பல் செயல்பட்டு வருகிறது. இதனால் பழைய வாகனங்களை வாங்குவோர் உஷாராக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்