இளைஞர்கள், பெண்கள் தொழில் தொடங்க உதவி: டிடிவி.தினகரன் உறுதி

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் நேற்று இறுதிகட்ட பிரச்சாரத்தை கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி விலக்கு பகுதியில் மாலை 6.10 மணிக்கு தொடங்கி, எட்டயபுரம் சாலை சந்திப்பு பகுதியில் நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமைய அமமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க, அந்த வழக்கு விரைந்து நடத்தப்பட்டு, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் மற்றும் மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும். கோவில்பட்டியில் உரிய மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் 50 ஆண்டுகளாக இருந்த ஓடைக் கடைகளை இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு புதிய கடைகள் கட்டி தரப்படும்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேவையான இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீர் கிடைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் சீராக கிடைக்க வழிவகை செய்யப்படும். சாலைகள் மேம்படுத்தப்படும். கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேவையான வசதிகள் செய்துதரப்படும். கயத்தாறு ஒன்றியத்தை மையப்படுத்தி கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும்.

தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன்காக்க தீப்பெட்டி தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும். மதுரை, தோவாளை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ளதைப்போல் கோவில்பட்டியில் பூ மார்க்கெட் உருவாக்கப்படும். பிரசித்தி பெற்ற கடம்பூர் போளி, சேவு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். இளைஞர்கள் மற்றும் மகளிர் குழுவினர் சுயமாக தொழில் தொடங்க தேவையான கடன் வசதி மானியத்துடன் வழங்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE