சென்னையில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பிராட்வே மாநகர பேருந்து நிலையத்தில் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பயணிகளிடம், முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினார். உடன் சுகாதாரத் துறை அதிகாரிகள். படம்: ம.பிரபு 
தமிழகம்

அன்றாட பரிசோதனையை 75 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை; தமிழகத்தில் பரிசோதிக்கப்படும் 100 பேரில் 2 பேருக்கு கரோனா: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பரிசோதிக்கப்படும் 100 பேரில் 2 பேருக்கு கரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை பகுதியில் கரோனா பரவல் தடுப்பு பணிகளை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 100 பேருக்கு பரிசோதனை செய்தால் ஒருவருக்கு மட்டுமே தொற்று இருந்தது. தற்போது 100 பேருக்கு பரிசோதனை செய்தால், 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகிறது. இந்நிலையில் கரோனா தொற்று தடுப்பு தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகிறது.தமிழகத்தில் கடந்த 4 நாட்களில்,கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 38 ஆயிரத்து 372 நபர்களிடம் இருந்து ரூ.83 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அரசு சார்பில் 69 மையங்கள் இயங்கி வருகின்றன. அந்தந்தப் பகுதிகளில் தோராயமாக 20 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் சிலதினங்களுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் ஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்ததில், அந்நிறுவனத்தின் தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய 3 கிளைகளிலும் சேர்த்து 364 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், 1,589 கிராமங்களில் மட்டுமே தொற்று உள்ளது. 3-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் 57 ஆக உள்ளன. நகர்ப்புறங்களில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள நிலையில், அவற்றில் 3,059 தெருக்களில் மட்டுமே தொற்று உள்ளது. 3 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டோர் உள்ள தெருக்கள் 284 ஆக உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர் ஆகியபகுதிகளில் தொற்று அதிகரித்துள்ளது. மாநில அளவில் தினமும் 50 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 75 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும் 7 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா பாதிப்பு இருந்த நிலையில், அது 500 ஆககுறைந்ததற்கு மக்களின் பங்களிப்பே முக்கிய காரணம்.

சென்னையில் மடிப்பாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகியஇடங்களில் பாதிப்பு அதிகமாகஉள்ளது. ராயபுரம், தண்டையார்பேட்டையில் தொற்று குறைவாகவே உள்ளது.

அரசியல் கூட்டங்களில் பங்கேற்போர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும். தமிழகத்தில் இதுவரை 31 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 15 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

SCROLL FOR NEXT