மணல் கொள்ளையை ஊக்குவிக்கிறார்; அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேச்சு: செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார்

தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராகவும், அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையிலும் பேசிய செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் பகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது, ''ஸ்டாலின் 11 மணிக்குப் பதவி ஏற்பார். பதவி ஏற்றுக்கொண்டவுடன் 11.10 மணிக்கு மாட்டுவண்டிகளை ஆற்றில் இறக்குங்கள். இதை அதிகாரிகள் யாரும் தடுக்க மாட்டார்கள். தடுப்பவர் யாரும் இருக்க மாட்டார்கள்'' எனப் பேசியிருந்தார்.

செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசிய காணொலி வைரலானது. சமூக வலைதளங்களில் பலரும் அதை ஷேர் செய்து கண்டித்தனர். மணல் திருட்டை ஊக்குவிக்கும் வண்ணம் பேசுவதும், தடுக்கும் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என மிரட்டும் தொனியில் கூறுவதும் தேர்தல் விதிமீறல். பொதுமக்களைத் தவறாக வழி நடத்துவது, அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுக்கும் வகையில் தூண்டும் பேச்சு என அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பேசும் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை கோரி அதிமுக சார்பில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் தலைமையிலான குழுவினர் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் மனு அளித்தனர்.

அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது. சட்டத்தைக் கையில் எடுக்கும் வகையில் பொதுமக்களைத் தவறாக வழிகாட்டுவது, ஆற்று மணல் கொள்ளை குறித்து நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளதை மீறி தவறான வழியைப் பொதுமக்களுக்குக் காட்டுவது, அரசுப் பணி செய்யும் அதிகாரிகளை மிரட்டுவது ஆகியவை அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றாமலும், மக்களைத் தூண்டும் வகையிலும் பேசிய செந்தில் பாலாஜி மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE