புதுச்சேரியில் ஒரிரு நாளில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக தலைவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மாநிலத்தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 4) கூறியதாவது:
"உங்கள் விருப்பம், எங்கள் வாக்குறுதி" என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை தயாரித்து வருகிறோம். அரசு ஊழியர்கள், மீனவர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டு சிறந்த தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். பொதுமக்களிடம் கருத்து கேட்க மார்ச் 5 (நாளை) முதல் மூன்று நாட்களுக்கு வேனில் பெட்டி அமைத்து அனைத்துத் தொகுதிகளுக்கும் கொண்டுசெல்ல உள்ளோம்.
அதேபோல், காங்கிரஸ் அரசு மீதான குற்றச்சாட்டு குழுவில் அரசு செய்த ஊழல், முறைகேடு, தவறுகளை பட்டியலிட உள்ளோம். மேலும், காங்கிரஸ் கட்சியானது தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, நிறைவேற்றாமல் உள்ளதையும் வெளியிடுவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல்முறையாக புதுவையில் இந்த கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளது. இதனால் கூட்டணியை முடிவு செய்து அறிவிப்பதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. அதிகாரப்பூர்வமாகவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஓரிருநாளில் கூட்டணி குறித்த தெளிவும், தொகுதி பங்கீடும் வெளியாகிவிடும்.
எங்கள் கூட்டணி 30 தொகுதிகளிலும் வெல்லும். எதிரணியான காங்கிரஸ், திமுக கூட்டணியில்கூட இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. ரங்கசாமி தன்னை முதல்வராக அறிவித்தால்தான் கூட்டணிக்கு வருவேன் என வலியுறுத்தவில்லை".
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.