நமச்சிவாயம் விலகியதைத் தொடர்ந்து நாளை காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் கூடி விவாதிக்க உள்ளனர். இக்கூட்டத்தில் புதுவை பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்க முயற்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. கட்சியில் முக்கிய நபரான நமச்சிவாயம் அமைச்சர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து உட்கட்சிப் பூசலால் வெளியேறி பாஜகவில் இணைந்துவிட்டார். அத்துடன் எம்எல்ஏவாக இருந்த தீப்பாய்ந்தான், நமச்சிவாயத்துக்கு ஆதரவாகக் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் 12 முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். .
இந்நிலையில் இன்று சஞ்சய்தத் புதுச்சேரி வந்து கட்சி நிர்வாகிகள் முக்கியமானோருடன் கலந்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து நாளை மதியம் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர், புதுவை பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூடுகிறது.
குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி, பல்லம்ராஜூ, நிதின்ரவுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கின்றனர்.
இதுபற்றி கட்சித் தரப்பில் கூறுகையில், “நமச்சிவாயம் உட்பட கட்சியில் இருந்து முக்கியமானோர் விலகலால் பேரவைத் தேர்தலைச் சந்திப்பதில் உள்ள பிரச்சினைகள், கூட்டணிக் கட்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமையும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இக்கூட்டங்களில் முக்கிய முடிவுகள், போட்டியிட பலம் வாய்ந்த தொகுதிகள் பற்றி முடிவு எடுக்க வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டனர்.