அதிமுக அரசை அகற்றும் சக்தி ஸ்டாலினுக்கு இல்லை: எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

அதிமுக அரசை அகற்றும் சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் எம்ஜிஆரின் 104-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

குழந்தைகள் முதல் முதியோர்வரை தெரிந்த ஒரே தலைவர் எம்ஜிஆர். அவரின் பெயரை உச்சரித்தால்தான் கட்சியைத் தொடங்கமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள், அவர்களின் குடும்ப வாரிசை வளர்த்துச் சென்றுள்ளனர்.

ஆனால், நாம் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாரிசுகள். யார் வேண்டுமென்றாலும் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற கட்சி அதிமுக. ஆனால், திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. கரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் கேட்கிறார். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் கரோனாவைக் கட்டுப்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

ஏழை மக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் தமிழக அரசுஅவர்களை கண் இமை போல் காத்து வருகிறது. அதிமுக ஆட்சியில் மக்கள்தான் எஜமானர்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகதலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை அளித்து வருகிறார். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. அவர்களின் வழியில் அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

உள்ளாட்சி, வேளாண்மை, மின்சாரம், சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழக அரசுபல்வேறு விருதுகள், நற்சான்றுகளைப் பெற்றுள்ளது. நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையின்றி வழங்கி வருகிறோம்.

ஊழல் குறித்து பேசி வரும் ஸ்டாலின், ஊழல் குறித்து ஒரே மேடையில் துண்டு சீட்டு இன்றி விவாதிக்க அவர் தயாரா? வரும்தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

கனவில் வேண்டுமென்றால் 234 தொகுதிகளிலும் ஜெயிக்கலாம். அவரால், இதுபோன்று கனவுதான் காண முடியும். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருபோதும் நனவாகாது. அதிமுக அரசை அகற்றும் சக்தி ஸ்டாலினுக்கு இல்லை. வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக அரசு தொடர மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். இதை எம்ஜிஆர்பிறந்தநாளில் நாம் சூளுரையாக ஏற்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE