புதுவையில் அரசுப் பள்ளி ஆசிரியர் உட்பட 22 பேருக்குக் கரோனா: ஆசிரியர்கள், மாணவிகளுக்குப் பரிசோதனை

புதுச்சேரியில் புதிதாக 22 பேருக்குக் கரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது. 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியருக்குத் தொற்று ஏற்பட்டதால் பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் 2,063 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 18, மாஹே- 4 என மொத்தம் 22 பேருக்குக் கரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால், ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 638 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38,478 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 152 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 153 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 305 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 34 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37,535 (97.55 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5,19,086 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4,76,095 பரிசோதனைகளுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியருக்குக் கரோனா

புதுவையில் கடந்த 4-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளில் சோதனை முறையில் வகுப்புகள் நடந்து வருகின்றன. வரும் 18-ம் தேதி முதல் பள்ளிகளை முழுமையாக இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பாக்குமுடையன்பேட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சுகாதாரத் துறையினர் அந்தப் பள்ளிக்குச் சென்று மற்ற ஆசிரியர்கள், மாணவிகளுக்குப் பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் ஆசிரியர்கள் யாருக்கும் தொற்று பரவவில்லை. இருப்பினும் 5 நாட்கள் ஆசிரியர்களைத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE