எதிர்க்கட்சி போலச் செயல்படும் புதுச்சேரி ஆளுநர்: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

By வீ.தமிழன்பன்

துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டால் புதுச்சேரி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தினர், பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இன்று (ஜன.9) வேதாரண்யத்தில் இருந்து தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று பிற்பகலில் காரைக்கால் வந்த அவர்களுக்கு காரைக்கால் மாவட்ட விவசாயிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் விவசாயிகள் மத்தியில் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

”விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உயிருக்கும், உடமைக்கும் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மாற்றுவதற்குத் துணைநிலை ஆளுநர் மறுக்கிறார். இதனால் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இத்தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இதனைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

எனவே, புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். முதல்வர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 எனப் புதுச்சேரி முதல்வர் நிர்ணயம் செய்ய வேண்டும்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எதிர்க்கட்சி போலச் செயல்படுகிறார். கூட்டாட்சிக்கு முரணாக, மக்களாட்சித் தத்துவத்துக்கு, அரசுக்கு எதிராக அவர் செயல்படுவது கண்டிக்கத்தகக்து. இதனைப் பிரதமர் ஊக்கப்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு இருக்கிறது. 5 ஆண்டுகளாக அரசைச் செயல்படவிடாமல், பாஜகவுக்கான அரசியல் லாப நோக்கத்தோடு ஆளுநர் செயல்பட்டதன் விளைவு, புதுச்சேரி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE