வாடிக்கையாளரிடம் முழுத்தொகை பெற்றும் வீட்டு மனையைப் பத்திரப்பதிவு செய்துதராத கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

By க.சக்திவேல்

வாடிக்கையாளரிடம் முழுத் தொகையைப் பெற்றுக்கொண்டு வீட்டு மனையைப் பத்திரப் பதிவு செய்து தராத கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்துக் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த வி.தயாளன் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

''வீட்டு மனை வாங்க முடிவெடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகினேன். அவர்கள் பொள்ளாச்சி, சிஞ்சுவாடி கிராமத்தில் உள்ள 1200 சதுர அடி வீட்டு மனையை ரூ.1.80 லட்சத்துக்கு அளிப்பதாகத் தெரிவித்தனர். அதை மாதத் தவணையாக ரூ.3 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டேன். முழுத் தொகையையும் செலுத்திய பிறகு எனது பெயரில் வீட்டு மனையைப் பத்திரப் பதிவு செய்து தருமாறு கோரினேன்.

ஆனால், அவர்கள் அரசிடம் அனுமதி பெற 6 மாதம் ஆகும் என்பதால் அதுவரை காத்திருக்குமாறு தெரிவித்தனர். மேலும், மனையை உரிய காலத்தில் பதிவு செய்து தருவோம் அல்லது பணத்தை வட்டியுடன் திருப்பி அளித்து விடுவோம் என்று தெரிவித்தனர். ஆனால், பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை. பின்னர், ரூ.1.50 லட்சத்தை மட்டும் அளிப்பதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, முழுத் தொகையையும் திருப்பி அளிக்கக் கோரி 2019 ஜூலை 10-ம் தேதி கடிதம் அனுப்பினேன். அதற்கும் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, எனக்குச் சேர வேண்டிய முழுத் தொகையை வட்டியுடன் அளிக்கவும், மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஏ.பி.பாலச்சந்திரன், உறுப்பினர் எஸ்.சரஸ்வதி ஆகியோர், "கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்டபடி நிலத்தை மனுதாரர் பெயரில் பதிவு செய்ய முன்வரவில்லை, பணத்தையும் திருப்பி அளிக்கவில்லை. இது சேவைக் குறைபாடாகும்.

எனவே, மனுதாரர் செலுத்திய ரூ.1.80 லட்சத்தை 15 சதவீத வட்டியுடன் கட்டுமான நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.75 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE