நெல்லை பேருந்து நிலைய மணல் எந்த வகையைச் சேர்ந்தது?- ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்

நெல்லை பேருந்து நிலைய அடித்தளத்துக்கு தோண்டப்பட்ட இடத்தில் கிடைத்த மணல் எந்த வகையை சேர்ந்தது என்பதை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த சுடலைகண்ணு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நெல்லை பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்தில் அடித்தளம் அமைக்க சுமார் 30 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பேருந்து நிலையம் அருகே தாமிரபரணி ஆறு ஓடுவதால் அப்பகுதி முழுவதும் மணல் நிறைந்த பகுதியாகும். இதனால் அந்த 30 அடி பள்ளத்தில் ஆற்று மணல் நிரம்பியிருந்தது.

இந்த மணல் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் மனு அளித்ததால் மணல் ஏலம் விடப்பட்டது. பின்னர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையுடன் மணல் குறைந்த தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

எனவே, நெல்லை பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் எடுக்கப்பட்ட மணல் மற்றும் களி மண்னை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கவும், மணல் கடத்தலுக்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், பேருந்து நிலைய அடித்தளத்துக்கு தோண்டிய இடத்தில் கிடைத்த மணல் என்ன வகையைச் சார்ந்தது? எத்தனை யூனிட் மணல் எடுக்கப்பட்டது? எத்தனை லாரிகளில் இடமாற்றம் செய்யப்பட்டது? அதன் மதிப்பு என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் நெல்லை பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் கிடைத்த மணல்/மண் வகையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற புவியியல் துறை இணை இயக்குனரும், வழக்கறிஞருமான கே.கலைவாணன், வழக்கறிஞர் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

அவர் நெல்லை பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணி நடைபெறும் இடம் அருகே நேரில் ஆய்வு நடத்தி துளை போட்டு மண்/ மணல் மாதிரியை சேகரிக்க வேண்டும். அதேபோல் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மண்/மணல் மாதிரியையும் சேகரிக்க வேண்டும்.

பின்னர் அவற்றை ஆய்வு செய்து எந்த வகையிலானது என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கறிஞர் ஆணையருக்கு அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

பின்னர் விசாரணை நவ. 20-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE