2021 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் மாறுதல்; காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படும்: குஷ்பு கணிப்பு

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் மிகப்பெரிய மாறுதல் வரும் என நினைக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 10) காலை முதல் நடந்து வருகிறது.

இதில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 127 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 73 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு, பிஹார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நரேந்திர மோடியின் அலை தொடர்ந்து இன்னொரு வெற்றியைப் பார்க்கிறது. பாஜக மக்களுக்காக உழைக்கிறது என்பதை, ஏன் வாக்காளர்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு விட்டது, எங்கு சென்றாலும் அவர்கள் தேவையில்லாத ஒரு சுமை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் 2021 தேர்தல் கூட்டணியில் மிகப்பெரிய மாறுதல் வரும் என நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டு, தேவையில்லாத சுமை என்று கூறி யாரும் கூட்டணிக்குப் பரிசீலிக்காமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழகத் தேர்தலிலும் பாஜக தனது வெற்றி முகத்தைத் தொடரும். நரேந்திர மோடியைத் தமிழகம், பெரிய அளவில் பாதை போட்டு வரவேற்கும். வளர்ச்சி, முன்னேற்றம், மனிதம், நேர்மையுள்ள, வேலைவாய்ப்பு தரும் அரசை ஆரத்தழுவும்"

அடிக்கடி கை கழுவுங்கள். இது கரோனாவுக்கான பாடம். நிரந்தரமாய் கையைக் கழுவுங்கள். இது மோடி ஜி பிஹாரில் உணர்த்திய பாடம். வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்''.

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE