யாராக இருந்தாலும் மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது: கருனாஸ் எம்எல்ஏ பேட்டி

By இ.ஜெகநாதன்

‘‘யாராக இருந்தாலும் மக்கள் மனது புண்படும்படி பேசக் கூடாது,’’ என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.

மருதுபாண்டியர்கள் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மருது பாண்டியர்களின் தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சிவகங்கையிலும், புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும் திரு உருவச் சிலை அமைக்க வேண்டும்.

யாராக இருந்தாலும் பொதுமக்கள் மனது புண்படும்படி பேசக் கூடாது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவை ஆளுநர் அனுமதிக்காமல் இருப்பது கிராமப்புற மாணவர்களின் கனவை சிதைக்கும் செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன், பெண்களை இழிவுபடுத்தியதாக பாஜக குற்றஞ்சாட்டுகிறதே எனக் கேள்வி எழுப்ப, "யாராக இருந்தாலும் மக்கள் மனது புண்படும்படி பேசக் கூடாது" எனக் கூறிச் சென்றார்.

தலைவர்கள், பிரமுகர்கள் அஞ்சலி:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடந்த மருதுபாண்டியர்கள் குருபூஜையையொட்டி, அவர்களது நினைவிடத்தில் அமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் குருபூஜை நடந்தது. இதையொட்டி பெண்கள் பால் குடம் எடுத்தனர். தொடர்ந்து அதிமுக சார்பில் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், எம்எல்ஏ நாகராஜன், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா, மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் சார்பில் எம்பி கார்த்தி சிதம்பரம், மலேசியா பாண்டியன் எம்எல்ஏ, திமுக சார்பில் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், மூமுக தலைவர் சேதுராமன், அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, முன்னாள் எம்எல்ஏ உமாதேவன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மரியாதை செலுத்திய பிறகு அமைச்சர் ஜி.பாஸ்கரன் கூறுகையில், ‘‘சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் சிலை வைப்பது குறித்து ஏற்கெனவே முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதுகுறித்து முதல்வர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்,’’ என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE