புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை: மீன் சந்தை, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

புரட்டாசி மாதம் முடிந்த முதல்ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் சந்தை, இறைச்சி கடைகளில் நேற்று மக்கள்கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் சிலர் அசைவ உணவுகளை உண்ணாமல் இருப்பது வழக்கம். இதனால், செப்டம்பர் 17-ம் தேதி முதல் கடந்த 16-ம்தேதி வரை மீன் விற்பனை சந்தை மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில், புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அதிகாலை 4 மணி முதலே சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்க வந்தனர்.

மழை பெய்த காரணத்தால் வியாபாரிகள் நனைந்தபடியே விற்பனையில் ஈடுபட்டனர். மீன்களை வாங்க வந்தவர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கமாக 130டன் முதல் 150 டன் வரையிலான மீன்கள் விற்பனையாகும்.

நேற்று 150 டன் முதல் 170டன் வரையிலான மீன்கள் விற்னைக்கு வந்தன. மழையின் காரணமாக மீன்களின் விலை அதிகமாக உயரவில்லை. ரூ.20 முதல் ரூ.50 வரையே அதிகரித்து காணப்பட்டது. இதன்படி, ஒரு கிலோ ரூ.550-க்குவிற்கப்பட்டு வந்த வஞ்ஜிரம்ரூ.600, ரூ.350-க்கும் விற்கப்பட்ட கருப்பு வவ்வால் ரூ.375, ரூ.160-க்கு விற்கப்பட்டு வந்த நண்டு ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சிந்தாதிரிப்பேட்டை, நொச்சிக்குப்பம், வடபழனி உட்பட சென்னை முழுவதும் மீன் விற்பனை சந்தைகளில் மீன்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

இறைச்சிக் கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இறைச்சியை வாங்க வந்தவர்களை பெரும்பாலான வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நிற்க வைத்து வியாபாரம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE