குமரியில் மழை நின்ற நிலையில் பேச்சிப்பாறை நீர்மட்டம் 45 அடியை தாண்டியது

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில்பெய்த தொடர்மழை நேற்றுஓய்ந்த நிலையில், பேச்சிப்பாறை நீர்மட்டம் 45 அடியைக் கடந்துள்ளது. தாமிரபரணி ஆற்றுவெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதியில் இருந்து கனமழை பெய்து வந்தது. ஏற்கெனவே சென்ற மாதம் பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்திருந்த நிலையில், தற்போதைய மழையால் அனைத்து அணைகளும் உச்சநீர்மட்டத்தை எட்டியுள்ளன. நீர்நிலைகள் அருகேவசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம்மாலையில் இருந்து மழை நின்று சாதாரண சூழல் நிலவுகிறது.

48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 45.05அடியாக இருந்தது. 1,550 கனஅடிதண்ணீர் வரத்தாகிறது. அணைப்பகுதியை பொதுப்பணித்துறை நீர்ஆதார பொறியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.05 அடியாக உள்ளது. 1,720 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. 3,061 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பொய்கை அணை தவிர பிற அணைகள் அனைத்தும் தற்போது வெள்ள அபாய கட்டத்தில் உள்ளன. முக்கடல் அணையின் நீர்மட்டம் 24 அடியை தாண்டியுள்ளது.

பெருஞ்சாணியில் இருந்துவெளியேறும் தண்ணீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை சப்பாத்து பாலம் மூழ்கியதால், பொதுமக்கள் அவ்வழியே செல்ல நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே மருதங்கோடு கழுவன்திட்டையைச் சேர்ந்த ஷாஜிகுமார்(30) என்பவர்நேற்று முன்தினம் மாலை குழித்துறை தாமிரபரணி ஆற்றுசப்பாத்து பாலத்தில் குளித்து கொண்டிருந்தபோது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

குழித்துறை தீயணைப்பு வீரர்கள் நேற்று 2-வது நாளாக 2 கி.மீ. தூரத்துக்கு அவரைத் தேடினர். ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இப்பணிக்கு இடையூறு ஏற்பட்டது.

குவியும் சுற்றுலா பயணிகள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள குத்தரபாஞ்சான் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு செல்ல வனத்துறையினர் அனுமதிக்காத நிலையில், வழியில் உள்ள கன்னிமார்தோப்பு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். நேற்று விடுமுறைதினம் என்பதால் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE