காஞ்சிபுரத்தில் கரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்தில் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,அனைவரும் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தவும் கரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தனியார்அமைப்பு ஒன்றின் சார்பில் நடைபெற்ற மாரத்தானை, கச்சபேஸ்வர் கோயில் முன்பாக காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமேகலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான், 4 ராஜவீதிகளையும் சுற்றிவந்து நிறைவுற்றது. மொத்தம் 4 கி.மீ தூரம் மாணவர்கள் ஓடிய இந்த மாரத்தானில், வெற்றிபெற்ற முதல் 3 பேருக்கு பதக்கங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சியாளர் செல்வம் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.