நினைவுக் குறிப்புகள்: போராட்டங்களின் தோழர் உமாநாத்!

By கல்யாணசுந்தரம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினருமான ஆர்.உமாநாத் இன்று திருச்சி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92.

தோழர் உமாநாத் கேரளா மாநிலம் காசர்கோடு என்ற இடத்தில் 1921 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் ராமநாத் ஷெனாய். தாய் நேத்ராவதி. பிராமண குடும்பத்தில் பிறந்த இவருக்கு 5 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். மார்க்சிஸ்ட் மாநில உறுப்பினர் யு.வாசுகி, நிர்மலா ராணி மற்றும் லக்‌ஷ்மி ஆகியோர் இவரது மகள்கள் ஆவர்.

உமாநாத் சிறு வயதிலேயே 1930-ல் நடந்த அந்நிய துணி எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். கல்லூரியில் பயின்றபோது வேலையின்மைக்கு எதிராக கண்ணனூர் முதல் சென்னை கோட்டை வரை நடந்த பட்டினி பாதயாத்திரையில் பங்கேற்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் 1940 ஆம் ஆண்டு தன்னை கட்சியின் முழுநேர ஊழியராக இணைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து கட்சி பணிகளை மேற்கொண்டார்.

பிரிட்டிஷ் ஆட்சியை வன்முறை மூலம் தூக்கி எறிய சதி செய்ததாக கைது செய்யப்பட்டு, சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். 9 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய உமாநாத், பல போராட்டங்கள், உண்ணாவிரதத்திற்கு தலைமை வகித்துள்ளார்.

தோழர் உமாநாத் நடத்திய உண்ணாவிரத போராட்டங்கள் மிகவும் பிரபலமானவை. பெரும் வெற்றிகளை ஈட்டியவை. 2 வாரம், 3 வாரம், 4 வாரம் என்று அவர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். உயிர் போகும் நிலைவரினும் கோரிக்கைகள் நிறைவேறாமல் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றதே இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்ததில் உமாநாத் பங்கு மகத்தானதாகும்.

7 வருடங்கள் 10 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 7 வருடங்கள் 2 மாதங்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். உமாநாத் சோவியத் யூனியன், மக்கள் சீனம், நிமேனியா, பல்கேரியா, ஆஸ்திரேலியா, ரோமாபுரி, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளுக்கு சென்றவர். கட்சி உறுப்பினராக தொடங்கி அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தன்னை உயர்த்திக் கொண்டவர்.

இவர் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் பொன்மலை தியாகிகள் திடலில் சடங்குகள் இன்றி திருமணம் செய்துகொண்டார். உமாநாத் வாழ்க்கையில் தோழர் பாப்பா உமாநாத்தின் பங்கு மகத்தானது. மனைவியாக, நல்ல தோழராக, சக போராளியாக வாழந்திருக்கிறார்.

1962-ல் புதுக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மரண தண்டனை கூடாது என்பதை வலியுறுத்தி தனது முதல் கன்னிப் பேச்சை நாடாளுமன்றத்தில் பேசியவர். சிஐடியு மாநில பொதுச் செயலாளராகவும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இரு தடவை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தோழர் உமாநாத் இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் உழைப்பாளிகளின் உரிமைக்களுக்காக சிம்ம கர்ஜனை செய்தவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு வித்திட்டவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு இவரது போராட்டங்கள் உதவின.

ஆலைப் பிரச்சினை முதல் உலக பிரச்சினை வரை பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேசி புரிய வைப்பதில் உமாநாத் நிகரற்றவர். தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்கள் இயக்கத்தை சிஐடியு மூலம் உருவாக்கியே தீரவேண்டும் என்று உமாநாத் உறுதியாக நின்றார். பெண்களிடம் உள்ள அறியாமையையும், மூடநம்பிக்கைகளையும் விரட்டி அவர்கள் பாரதி பாடியதுபோல் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச்செருக்கும் கொண்டவர்களாக பெண்ணுரிமைக்காக போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் உமாநாத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்