பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தடை எதிரொலி: கூடுதல் பணி வாய்ப்பு கோரி முதல்வருக்கு ஊர்க்காவல் படையினர் கடிதம்

By என்.சன்னாசி

‘பிரண்ட்ஸ் ஆப்’ போலீஸுக்கு தடை விதிக்கப்பட்ட சூழலில் தங்களுக்கு கூடுதல் பணி வாய்ப்பு வழங்கவேண்டும் எனக் கோரி ஊர்க்காவல் படையினர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் காவல் துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் செயல்படுகின்றனர். ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸும் செயல்பட்டு வந்தனர்.

இவர்களில் ஊர்காவல் படையினர் காவல்துறை போன்று சீருடை அணிந்து பணிபுரிகின்றனர். இவர்களுக்கு காவல்துறையினருக்கு அளிக்கப்படுவதுபோல் ஒருமாத பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேர்தல், திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைத் தவிர்த்து, பிற நாட்களில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது. இவர்களுக்கு ஊக்கத்தொகை, உணவுப் படி சலுகை உண்டு. ஏரியா கமாண்டர் ஒருவர் தலைமையில் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர்.

ஆனால் ‘பிரண்ட்ஸ் ஆப்’ போலீஸ் படை அப்படி அல்ல. இவர்கள் தன்னார்வலர்கள் போன்று ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 5 அல்லது 7 பேர் வரை பணிபுரிவர். இவர்களுக்கு சீருடை , ஊக்க ஊதியம் எதுவும் வழங்கப்க்படுவதில்லை.

இந்நிலையில் தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்ட விவகாரத்தில் ‘பிரண்ட்ஸ் ஆப்’ போலீஸ் படையினரும் உடன் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழகத்தில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ‘பிரண்ட் ஆப்’ போலீஸ் படைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சூழலில் தமிழகம் முழுவதும் பணியிலுள்ள ஊர்க்காவல் படையினருக்கு கூடுதல் நாட்கள் பணி வாய்ப்பு அளிக்கவேண்டும் என, தென்மாநில ஊர்க்காவல் படை நலக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நலக்குழுவின் தமிழக தலைவர் அலெக்சாண்டர், செயலர் அந்தோணி தாஸ் கூறியது: ‘பிரண்ட்ஸ் ஆப்’ போலீஸ் படைக்கு தடை என்பது சரியானது தான். அவர்களுக்கு முறையான பயிற்சி எதுவுமின்றி, அந்தந்த காவல் நிலையத்தில் தன்னார்வலர்கள் போன்று செயல் டுவது வழக்கம்.அவர்கள் வரம்பு மீறியதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பெண்கள் உட்பட 16,500 பேர் பணிபுரிகிறோம். சென்னையில் மட்டுமே 3, 500 பேர் உள்ளனர். தினமும் ரூ.150 சம்பளம் இருக்கும் போது, 30 நாள் பணி வாய்ப்பு கிடைத்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின், தினமும் ரூ.500 சம்பளம் விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.

தமிழகத்தில் தினமும் ரூ.560 சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனாலும், மாதத்தில் பணி நாள் 5 மட்டும் பணி வழங்கப்படுகிறது. தற்போது, கரோனா தடுப்புப் பணியில் போலீஸாருக்கு உதவியாக செயல்படுகிறோம். பலர் இந்த வேலையை நம்பியே இருக்கிறோம். மாதத்தில் 25 நாட்கள் பணி வாய்ப்பு அளிக்க பரிசீலிக்கப்படும் என, ஏற்கெனவே அரசு உத்தரவாதம் அளித்தது.

‘பிரண்ட்ஸ் ஆப்’ போலீஸுக்கு தடை விதிக்கப்பட்ட சூழலில் எங்களுக்கு கூடுதல் பணி வாய்ப்பு வழங்கவேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே தமிழக முதல்வர், டிஜிபி, கூடுதல் டிஜிபிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். பரிசீலனையிலுள்ள கோப்பு குறித்து முதல்வர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE