தவறு செய்யும் போலீஸார் மீது புகார் அளிக்க தனி அமைப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமா தமிழகம்?

By க.சக்திவேல்

பொதுமக்கள் யாராவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், போலீஸாரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால், போலீஸாரே புகாரில் சிக்கினால் யாரிடம் தெரிவிப்பது?. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே, தவறு செய்யும் போலீஸார் மீது புகார் அளிக்க தனி அமைப்பை (Police Complaints Authority) உருவாக்க வேண்டும் என கடந்த 2006-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி தனி அமைப்பை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019 நவம்பரில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளித்த தமிழக அரசு, தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டத்தின்கீழ் 2019 நவம்பர் 14-ம் தேதி, போலீஸார் மீது புகார் தெரிவிக்க மாநில, மாவட்ட அளவில் தனி அமைப்பு (பிசிஏ) உருவாக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தது.

மாநில அளவிலான அமைப்பின் தலைவராக தமிழக உள்துறை செயலர், டிஜிபி, கூடுதல் டிஜிபி (சட்டம், ஒழுங்கு) ஆகியோர் அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர் எனவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, மாவட்ட அமைப்பின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், உறுப்பினர்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளரும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

போலீஸ் காவலில் உயிரிழப்பு

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் காவலில் யாரேனும் உயிரிழந்தால் அவரது வாரிசுகள், நெருங்கிய உறவினர்கள் மாநில, மாவட்ட அமைப்பிடம் புகார் அளிக்கலாம். அதேபோல, பாலியல் வன்கொடுமை, போலீஸ் காவலில் துன்புறுத்தல், பணமோசடி, நில மோசடி போன்றவற்றில் ஈடுபடுவோர் குறித்தும் புகார் அளிக்கலாம்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ளவர்கள் மீதான புகார்களை மாநில அளவிலான அமைப்பிலும், துணை காவல் கண்காணிப்பாளர் வரையிலான அந்தஸ்தில் உள்ள போலீஸார் மீதான புகார்களை மாவட்ட அளவிலான அமைப்பிடமும் தெரிவிக்கலாம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநில ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி இருக்க வேண்டும். அதேபோல, மாவட்ட அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி இருக்க வேண்டும். இதற்கு மாறான அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைப்பு உருவாக்கப்பட்டால்தான் உரிய முறையில் விசாரணை நடை பெறும். அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

உரிய நீதி கிடைக்காது

மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன் கூறுகையில், "கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற இடங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி புகார் தெரிவிப்பதற்காக அமைப்பை உருவாக்கியுள்ளனர். அங்கெல்லாம் மாநில அளவிலான புகார் தெரிவிக்கும் அமைப்பின் தலை வராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளே நியமிக்கப் பட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகளும், போலீஸாருமே அந்த அமைப்பில் இருந்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்காது. மாவட்ட அளவிலான புகார்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமே அளிக்க வேண்டும் என்றால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். நீதி வேண்டி பல ஆயிரம் செலவு செய்து, சாதாரண மக்களால் நீதிமன்றங்களில் வழக்கு நடத்த முடியாது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக பின்பற்றி, போலீஸார் மீது புகார் தெரிவிப்பதற்கான அமைப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும்" என்றார்.

முக்கிய செய்திகள்

மேலும்