புழல் சிறைக்குள் காவலர்களைத் தாக்கி கலவரத்தில் ஈடுபட்டதையடுத்து, போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட 6 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் 230 தண்டனைக் கைதிகள், 2,003 விசாரணைக் கைதிகள், 150 பெண் கைதிகள் உள்ளனர். பாஜக பிரமுகர்கள், இந்து அமைப்பு நிர்வாகிகள் கொலை வழக்குகளில் கைதான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான காஜா மொய்தீன், அப்துல் வகாப், ராஜா முகமது, தமீம் அன்சாரி, முகமது ரபீக், மண்ணடி அப்துல்லா உட்பட 16 பேரும் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான முகமது ரபீக் சிறையில் செல் போனில் பேசுவதை சிறை அதிகாரி இளவரசன் கண்டுபிடித்து, செல்போனை பறிமுதல் செய்தார். வேறு சில கைதி களிடம் இருந்து போதைப் பொருட்களை யும் அவர் கைப்பற்றினார். இதனால் அவர் மீது சில கைதிகள் கோபத்தில் இருந் துள்ளனர். தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.
இந்நிலையில், சிறை அதிகாரி இளவரசன் நேற்று முன்தினம் மாலை உயர் பாதுகாப்பு அறைக்கு சென்றபோது, அங்கு இருந்த கைதிகள் ஒன்றுசேர்ந்து திடீரென அவரை சரமாரியாகத் தாக்கினர். செங்கல், கட்டைகளால் அவரை தாக்கினர். தடுக்க முயன்ற சிறைக் காவலர்கள் முத்துமணி, செல்வின் தேவராஜன், சிறைக் காப்பாளர் ரவிமோகன் ஆகியோரையும் கைதிகள் தாக்கினர். காவலர் முத்துமணியை இரும்புக் கம்பியால் குத்தினர். தகவல் அறிந்து மற்ற காவலர்கள் கைதிகளை மடக்கிப் பிடித்து அறையில் அடைத்தனர்.
கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறை அதிகாரி இளவரசன், காவலர்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். முத்துமணியின் உடல்நிலை மோசமானதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, சிறைத் துறை தலைவர் திரிபாதி, டிஐஜி ராஜேந்திரன், வடக்கு மண்டல இணை ஆணையர் தினகர், மாதவரம் துணை ஆணையர் விமலா, புழல் உதவி ஆணையர் மன்னர் மன்னன் ஆகியோர் புழல் சிறைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, பன்னா இஸ்மா யில் மதுரை சிறைக்கும், பிலால் மாலிக் கடலூர் சிறைக்கும் மாற்றப்பட்டனர். வேலூர் சிறையில் தனி அறையில் போலீஸ் பக்ருதீன் அடைக்கப்பட்டார். காஜா மொய்தீன் சேலம் சிறைக்கும், மண்ணடி அப்துல்லா திருச்சி சிறைக்கும், முகமது ரபீக் கோவை சிறைக்கும் மாற்றப்பட்டனர்.
கொலை முயற்சி, அரசு அதிகாரியை தாக்குதல் உட்பட 12 பிரிவுகளின் கீழ் 20 கைதிகள் மீது புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.