முதல்வர் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் ஏன்?- ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்குக் காலத்தை, “தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும்” விளம்பரத்திற்காக வீணடிக்காமல், ஜூன் மாத ஊரடங்கையாவது விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாகப் பயன்படுத்தி கரோனாவைக் கட்டுப்படுத்த முதல்வர் முயற்சி செய்ய வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும், என்று ஏப்ரல் 16-ம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை நீட்டித்து முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில், “நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்து வருகிறோம்” என்றும், “தேவையான நிவாரணங்களைச் செய்து வருகிறோம்” என்றும், “குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகம்” என்றும், “நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகக் குறைவு” என்றும், தனது “கரோனா தோல்வியை” திசை திருப்புகிறார்.

நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறோம் என்றால், தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 333 பேருக்குத் தொற்று ஏற்பட்டது எப்படி? தினமும் 500 முதல் 1000க்கும் மேலான எண்ணிக்கையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதும் - நேற்றைய தினம் மட்டும் 1,149 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதும் இந்தத் தமிழ்நாட்டில்தானே?

தினமும் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை இருப்பதும் இந்த மாநிலத்தில்தானே? 'மக்களைப் பாதுகாக்கிறோம்' என்று முதல்வர் சொல்வது உண்மைக்கு மாறானது அல்லவா? அவருக்கே அது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இல்லையா?

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் இன்னமும் சிகிச்சை நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால், ஏதோ இந்தியாவிலேயே இது இமாலயச் சாதனை என்பதைப் போல முதல்வர் சொல்லிக் கொள்கிறார். 'நம்மை விட பாஜக ஆளும் குஜராத் நிலைமை படுமோசம்' என்று வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அப்படி பெருமை கொள்ளவும் அவரால் முடியாது, ‘குஜராத் முன்னாள் முதல்வர்’ கோபம் கொண்டாலும் கொள்வார். 'உயிரிழப்புகள் குறைவு' என்று முதல்வர் தனக்குத் தானே பெருமை பாராட்டிக் கொள்வது ஈவு இரக்கமற்ற எண்ணத்தின் வெளிப்பாடு.

173 குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாராமல், இந்த எண்ணிக்கை குறைவாகத் தெரியுமானால், அவர்களுக்கு அதிகார நோய் ஆழமாகத் தாக்கியிருக்கிறது என்று பொருள்.

2020 ஜனவரி 7-ம் தேதியே கரோனா பற்றி அறிந்திருந்தும், மார்ச் 7-ம் தேதியே முதல் கரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டும், மார்ச் 24-ம் தேதி வரைக்கும் அவகாசம் எடுப்பதில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டதால் ஏற்பட்ட விபரீதம்தான், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைத் தொட்டதும், 173 உயிர்கள் பலியானதும்.

ஒரு தனிமனிதரின் அலட்சியம், பொறுப்பின்மைக்குத் தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய பெரிய விலையைக் கொடுத்துள்ளார்கள். இவற்றை மக்கள் மன்றத்தில் மறைப்பதற்காக, தினந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் என்ற பெயரால் பொழுது போக்கிக் கொண்டு இருக்கிறார் முதல்வர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்கச் சொன்னேன்; அந்த குறைந்தபட்ச நிவாரணத்தைக் கூட இந்த அரசு கொடுக்கவில்லை.

“ஒன்றிணைவோம் வா” என்ற உன்னதத் திட்டத்தை அறிவித்து மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றைத் திமுக சார்பில் வழங்கினோம். மக்களிடமிருந்து வந்த கோரிக்கை மனுக்களை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், “பொய் பேட்டிகள்” வாங்கி வெளியிட்டு திமுகவின் முயற்சியைக் களங்கப்படுத்தவே நினைத்தார்கள்.

“ஒரு லட்சம் மனுக்கள் தரவில்லை, 98,752 மனுதான் இருந்தன என்கிறார் அமைச்சர் ஒருவர். 'தமிழ்நாட்டில் பசி, பட்டினியே இல்லை' என்று முதல்வர் சொல்கிறார். இத்தனை ஆயிரம் பேர் உணவுத் தேவைக்காக ஏன் மனு கொடுக்கிறார்கள்? எந்த லட்சணத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறது என்பது இதன் மூலமாக விளங்கவில்லையா?

'மக்களுக்கு எங்களால் எதுவும் தரமுடியாது, அதனால் தடைகளைத் தளர்த்துகிறோம், நீங்களே உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்' என்பதைச் சொல்லாமல் சொல்லி, கடமையிலிருந்து தன்னைக் கழற்றிக் கொண்டுள்ளார் முதல்வர். இது ஆபத்தானது! மேலும் அதிகமான கரோனா பரவலுக்கே வித்திடும்!

“பரிசோதனைகளை அதிகப்படுத்துவதே நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஒரே வழி” என்று தெரிந்தும், அதுபற்றி எதுவுமே முதல்வரின் அறிக்கையில் இல்லை.

மே 29 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான காணொலி ஆலோசனையில் “9.14 லட்சம் பிசிஆர் ஆய்வு உபகரணங்கள் வரப்பெற்றதாகவும்” அதில் “1.76 லட்சம் கையிருப்பு இருப்பதாகவும்” முதல்வர் கூறியிருந்தார். அன்றைய கணக்குப்படி பரிசோதனை செய்ய பயன்படுத்தப்பட்ட பிசிஆர் ஆய்வு உபகரணங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 550 தான்.

மீதி கையிருப்பு இருக்க வேண்டிய உபகரணங்கள் 4 லட்சத்து 47 ஆயிரத்து 450 ஆகும். ஆனால் முதல்வரின் கூற்றுப்படி 1.76 லட்சம் ஆய்வு உபகரணங்கள்தான் கையிருப்பு என்றால் மீதியுள்ள 2 லட்சத்து 71 ஆயிரத்து 450 உபகரணங்கள் எங்கே? இதில் கையிருப்பில் உள்ள உபகரணங்களின் எண்ணிக்கை தவறா? அல்லது பரிசோதனை செய்ததாகக் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை தவறா?

மாவட்ட வாரியாக பரிசோதனை, டெஸ்ட் கிட் விவரங்களை வெளியிடுவதில் அதிமுக அரசுக்கு ஏன் இந்த “மயான அமைதி”? பரிசோதனை மட்டுமல்ல; மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் பஞ்சம் என்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது.

ஐந்தாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா பேரிடர் காலத்தில் வாங்கியுள்ள வென்டிலேட்டர்கள் வெறும் 560 தான். ஆனால் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 804 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,781 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக உள்ளது.

“ஒருவர் கூட உயிரிழக்க இந்த அரசு அனுமதிக்காது” என்று கூறிய அரசுக்கு, வென்டிலேட்டர் கொள்முதலில் ஏன் இந்த அலட்சியம்? படுக்கைகள் உருவாக்குவதிலும் ஏன் இன்னமும் கூட மெத்தனம்?

ஆகவே, இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்குக் காலத்தை, “தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும்” விளம்பரத்திற்காக வீணடிக்காமல்; இந்த ஜூன் மாதத்தையாவது, உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாகப் பயன்படுத்தி கரோனாவைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அதை விடுத்து, அதிமுகவுக்குள் குழு அரசியல் நடத்த, ஒவ்வொரு அமைச்சராக இறக்கிவிட்டு, எதிர்க்கட்சிகளை ஏசவும், பேசவும் செய்வதால் எவ்விதப் பயனும் ஏற்படாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்