புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத்துறை தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடங்கப்பட்டு ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத்துறை இயங்கி வருகிறது. ஆனால் பிற்பட்டோர் நலத்துறை இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து அத்துறையை புதிதாக தொடங்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கோரின. இதன்படி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பிற்பட்டோர் நலத்துறை தொடங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

இந்நிலையில் சமூகநலத்துறையில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இன்று தொடங்கப்பட்டது.

இக்கட்டடத்தை சாரத்தில் தொடக்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

''புதுவை மாநிலத்தில் 75 சதவீதம் பிற்பட்ட இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களால் அரசின் திட்டங்களை விரைவில் பெற முடியாத நிலை ஏற்பட்டது.இதைக்கருத்தில் கொண்டு புதிதாக பிற்பட்டோர் நலத்துறை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக சமூகநலத்துறையில் இருந்து 40 அதிகாரிகள், ஊழியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். துறை செயல்பாட்டுக்காக ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும்'' என்று முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE