சிஏஏ எதிர்ப்பு: தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை

சிஏஏ எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் போராட்டத்திற்குத் தடை விதித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், சட்டப்பேரவையில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது. தடியடி நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், சிஏஏவை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் அங்கேயே இரவு, பகல் பாராமல் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (பிப்.19) அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தன. இது மிகப்பெரிய முற்றுகைப் போராட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி வாராகி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். மனுதாரர் வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது.

அவசர வழக்காக எடுக்க நீதிபதி சத்திய நாராயணன் அமர்வு மறுத்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வு முன் அவசர வழக்காக எடுக்க முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தலைமை நீதிபதி அமர்வு.

மனுதாரர் தரப்பில், “போராட்டம் நடத்துபவர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர். இந்தப்போராட்டத்தால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள், கல்லூரி, பள்ளிக்குச் செல்பவர்கள், பணிக்குச் செல்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக நீதிமன்றத்துக்குச் செல்பவர்கள், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இதற்குத் தடை விதிக்கக் கோருகிறோம்”. என்று தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் தரப்பில் ஆஜரான அரசுத் தரப்பு கூடுதல் வழக்கறிஞர் தனது வாதத்தில், ''குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களைக் கையாள்வது குறித்தும், வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நடக்கும் போராட்டங்கள் குறித்து பிப்.13 அன்று விரிவான அறிவிப்பு போலீஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு அனுமதி பெற வேண்டும் என்றால் 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், இவர்கள் நேற்றுதான் விண்ணப்பித்தார்கள். அதனால் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

பின்னர் வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் வழக்கறிஞர் சந்திரசேகரன் என்பவர் இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், அதில் , “கடந்த ஒரு வாரகாலமாக வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் நான், போராட்டம் நடக்கும் காரணத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பினரின் வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, ''போராட்டம் நடத்துவதற்கு 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்காமல் நேற்று விண்ணப்பித்ததால் நிராகரிக்கப்பட்ட அடிப்படையில் நாளை நடைபெறும் முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், அடுத்து வரும் மார்ச் 11 வரை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடவும் தடை விதிக்கப்படுகிறது.

நாளை சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் அனைத்துப் பணிகளையும் காவல்துறை செய்ய வேண்டும். இதுகுறித்து 4 வார காலத்திற்குள் மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் போராட்டம் நடத்தும் இஸ்லாமிய அமைப்புகள் யாரும் எதிர்த்தரப்பினராகச் சேர்க்கப்படவில்லை. அவர்களும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் போராடும் அமைப்புகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது இனிமேல்தான் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE