ரப்பர், பிளாஸ்டிக் எரித்தால் கடும் நடவடிக்கை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நாளை போகிப் பண்டிகையன்று சுற்றுச்சூழல் சீர்கேடு நிகழாமல் தடுப்பதற்காக பல்வேறு பிரச்சாரங்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

போகிப் பண்டிகை தினத்தன்று காற்று மாசுபடும் பொருட்களை எரிக்கக்கூடாது என சென்னை மாநகரில் ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள எச்சரிக்கை:

“போகியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்கையில் நச்சுப் புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல் பிரச்சினை, கண், மூக்கு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

நச்சு கரிப் புகையால் காற்று மாசுபட்டு சென்னை நகரமே கருப்பு நிறமாக மாறுகிறது. ஆகாய விமானங்கள் புறப்படுவதற்கும் சாலைப் போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும்.

மேலும் உயர் நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்குத் தடை விதித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE