ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் நனைந்தவாறு வருவாய்த்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம்

By கி.தனபாலன்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரி கொட்டும் மழையில் நனைந்தவாறு வருவாய்த்துறையினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தைப் புறக்கணித்த 20 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மீது, ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரியை பணியிட மாறுதல் செய்யக்கோரி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இன்று (திங்கள்கிழமை) ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ்.பழனிக்குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலர் கே.எம்.தமீம் ராஜா, மாவட்ட பொருளாளர் ஹரி.சதீஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் சேதுராமன், வரதராஜன், மாவட்ட இணை செயலர்கள் ஆர்.காசிநாததுரை, என்.பரமசிவன், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் என அனைத்து வருவாய்த்துறை அலுவலகளில் பணியாற்றும், 200க்கும் மேற்பட்ட பெண் அலுவலர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியிலிருந்து 1 மணி நேரம் நல்ல மழை பெய்தது. அப்போது மழையில் நனைந்தவாறே ஆண், பெண் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து 12.30 மணி முதல் 1 மணி நேரம் மீண்டும் மழை கொட்டியது. இருந்தபோதும் சங்க மாவட்ட மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக நனைந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் வராததால் பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காண முடியவில்லை. அந்த இருக்கைகள் காலியாக இருந்தன.

ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஏராளமானவர்கள் மக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்துள்ளனர். ஆனால் அவற்றை தீர்த்து வைக்க வருவாய்த்துறை அலுவலர்கள் இல்லை. அதனால் மக்கள் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த 9 சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர்கள், 9 தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்கள் 2 பேர் எனு மொத்தம் 20 பேர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE