நட்புக்காக மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நூதன முறையில் பாடம் நடத்திய காவல்துறை: 1330 திருக்குறள்களையும் எழுத உத்தரவு- பெற்றோர் வரவேற்பு

By அசோக் குமார்

திருநெல்வேலி

நட்புக்காக மோதலில் ஈடுபட்ட 2 பள்ளிகளைச் சேர்ந்த 49 மாணவர்கள் 1330 குறள்களையும் எழுத உத்தரவிட்டு பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நூதன தண்டனை விதித்தார்.

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்களுக்கும், மற்றொரு தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தீபாவளி தினத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தீபாவளி முடிந்த பின்னரும் அந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைத் தொடர்புகொண்டு பேசினார்.

இதில், மோதலில் ஈடுபட்ட 49 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களது செல்போன்களை ஆய்வு செய்தபோது, திருக்குறளில் உள்ள நட்பதிகாரப் பாடல்களை தங்கள் விருப்பத்துக்கு எடிட் செய்து, பகிர்ந்துகொண்டு நட்புக்காக மோதலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நட்பதிகாரத்தில் உள்ள திருக்குறள்களைக் கூறுமாறு காவல் ஆய்வாளர் உத்தரவிட்டார்.

ஆனால், திருக்குறளைக் கூற முடியாமல் அனைத்து மாணவர்களும் தவித்தனர். திருக்குறளை தங்கள் விருப்பத்துக்கு எடிட் செய்து, வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவர்களால் நட்பதிகாரக் குறளில் ஒன்றைக் கூட கூற முடியாதது போலீஸாருக்கு வியப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர்களில் சிலர் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் கைகளில் கயிறு கட்டியிருந்தனர்.

இதையடுத்து, அந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்துப் பேசினர். வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்தால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், மோதலில் ஈடுபட்ட 49 மாணவர்களும் 1330 திருக்குறள்களையும் எழுதிக் காட்டிவிட்டு, பள்ளிக்குச் செல்லலாம் என காவல் ஆய்வாளர் யோசனை கூறினார். இதற்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி, நேற்று காவல் நிலையத்தக்கு பெற்றோருடன் வந்திருந்த மாணவர்கள் திருக்குறள்களை எழுதினர். பின்னர், வீட்டுக்குச் சென்று திருக்குறள் எழுதினர். அவர்களில் 4 பேர் மட்டுமே 1330 குறள்களையும் முழுமையாக எழுதிவிட்டு, நேற்று காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் திருக்குறள்களை முழுமையாக எழுதவில்லை.

மொத்த திருக்குறள்களையும் எழுதினால் மட்டுமே பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்று காவல்துறையினர் கண்டிப்புடன் கூறினர். இதையடுத்து, காவல் நிலையத்தில் ஆங்காங்கே அமர்ந்து திருக்குறள்களை மாணவர்கள் எழுதினர். அவர்களது பெற்றோரும் காவல் நிலையத்துக்கு வந்திருந்து திருக்குறள் எழுதும் தங்கள் பிள்ளைகளைக் கண்காணித்தனர்.

மாணவர்களிடையே சாதிய மோதல்களைத் தடுக்க திருக்குறள் மூலம் நடவடிக்கை எடுத்து காவல் ஆய்வாளர் அளித்த நூதன தண்டனை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE