கோவை மத்திய சிறை நுழைவு வாயில் முன்பு 2-வது சிறை பஜார் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

டி.ஜி.ரகுபதி

கோவை 

கோவை மத்திய சிறையின், நுழைவு வாயில் அருகே 2-வது சிறை பஜார் இன்று தொடங்கப்படுகிறது.

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். காந்தி புரம் நஞ்சப்பா சாலையில் சிறைத் துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை பஜார் உள்ளது. இங்கு டீ, காபி, தின்பண்ட வகைகள், பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யப்படு கின்றன. தண்டனைக் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, இங்கு பணியமர்த்தப்படுகின்றனர். இந்த சிறை பஜாருக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது.

மத்திய சிறைக்கு நஞ்சப்பா சாலை மற்றும் வஉசி பூங்கா அருகே ஏடிடி காலனி ஆகிய இரு இடங்களில் நுழைவுவாயில்கள் உள்ளன. இதில் வஉசி பூங்கா அருகேயுள்ள நுழைவுவாயில் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

மத்திய சிறைக்கு வரும் காவலர்கள், கைதிகள், இவர்களை காண வரும் உறவினர்கள் போன்றோர் இந்த நுழைவுவாயிலைத்தான் பயன்படுத்துகின்றனர். தினசரி 500-க்கும் மேற்பட்டோர் இந்த வழியாக வந்து செல்கின்றனர். இதன் அருகே, 2-வது சிறை பஜார் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ண ராஜ் கூறும் போது,‘‘ கோவை சரக சிறைத்துறை டிஐஜி (பொறுப்பு) சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில், சிறை நுழைவு வாயில் அருகே 2-வது சிறை பஜார் அமைக்கப்பட்டுள்ளது. சிறைத் துறைக்கு சொந்தமான கட்டுமானப் பொருட்களை கொண்டு சுமார் 2 சென்ட் பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ள இந்த சிறை பஜார் இன்று முதல் செயல்பாட்டுக்குவருகிறது. டீ, காபி மற்றும் போன்டா, வடை, பப்ஸ் உள்ளிட்ட தின்பண்ட வகைகள், பேக்கரி பொருட்கள் சிறைத்துறை நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு இங்கு விற்கப்படும். நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 3 தண்டனைக் கைதிகள் இங்கு பணியில் ஈடுபடுத்தப்படுவர். அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை, வாரத்தில் 5 நாட்கள் இந்த சிறை பஜார் திறந்து இருக்கும்’’ என்றார்.டீ, காபி மற்றும் போன்டா, வடை, பப்ஸ் உள்ளிட்ட தின்பண்ட வகைகள், பேக்கரி பொருட்கள் சிறைத்துறை நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு இங்கு விற்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE