'முதலீட்டுக்காக அல்ல; சுற்றுலாவாக'- முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து துரைமுருகன் விமர்சனம்

முதல்வரும் அமைச்சர்களும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

14 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முதல் நாள் (29.08.19) சுகாதாரத்துறை தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நேற்று (30.08.2019) லண்டன் நாடாளுமன்ற எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் பழனிசாமி. கடந்த இரு நாட்களில் கோட், சூட் அணிந்து முதல்வர் பழனிசாமி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

இதற்கிடையே தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் அடுத்தடுத்த நாட்களில் லண்டன் செல்ல உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன். செய்தியாளர்களிடையே அவர் கூறும்போது, ''முதல்வரும் மற்ற அமைச்சர்களும் வெளிநாடு சென்ற பிறகு என்ன மாறுதல்? ஒன்றுமில்லை. முதல்வர் கோட் போட்டிருக்கிறார், அவ்வளவுதான். வேறு மாறுதல் எதுவும் இல்லை.

ஒரு தொழில் முதலீட்டைக் கொண்டு வருவதற்காக அவர்கள் வெளிநாடு சென்றது போலத் தெரியவில்லை. பெரிய சுற்றுலாவுக்குக் கிளம்பியது போலத்தான் தெரிகிறது. பெரிய குழுவாக, ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட ஏழு, எட்டு அமைச்சர்கள், கிட்டத்தட்ட 100 அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர்'' என்றார் துரைமுருகன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE