மாமூல் வாங்கும் போலீஸார் மீது நடவடிக்கை: ஊழல் தடுப்பு சட்டம் பாயும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

சென்னை

போலீஸார் மாமூல் வாங்குவது இனி தீவிர குற்றமாக கருதப்படும். மாமூல் வாங்கும் போலீஸார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார்.

கடைகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் போலீஸார் மாமூல் வசூலிப்பதை கண்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு உத்தரவை வெளியிட்டது. ‘‘மாமூல் வசூலிக்கும் போலீஸார் லஞ்சம் வாங்கியதாக கருதி அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’’ என்றும் கேள்வி எழுப்பியது.

இதைத் தொடர்ந்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி ஜே.கே.திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘காவல் துறையில் பணிபுரிபவர்கள் பிறரிடம் இருந்து வெகுமதிகள், பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது என்று காவல் துறை விதியில் உள்ளது. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த விதியை மீறி செயல்படுபவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் பணியில் இருப்பவர்கள் இந்த விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறார்களா என் பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் டிஜிபி திரிபாதி நேற்று மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வியாபாரம் செய்பவர்கள், ஓட்டல்கள், கடைகள், சந்தைகள் மற்றும் வியாபாரிகளிடம் போலீ
ஸார் வழக்கமாக மாமூல் பணம் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. இது தவறான குற்றச்செயல், தண்டனைக்குரிய குற்றம்.
எனவே, மாமூல் பணம் வசூலிக்கும் போலீஸார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். மாமூல் வாங்கும் போலீஸாருக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மாமூல் வாங்குவது இனி தீவிர குற்றமாக கருதப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE