தமிழ் இல்லாமல் நடத்தப்பட்ட அஞ்சல் துறை தேர்வு ரத்து: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் இல்லாமல் ஜூலை 14-ம் தேதி நடத்தப்பட்ட அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடந்த அஞ்சல் துறை தேர்வில் பிராந்திய மொழிகளை விடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வழக்கமாக தமிழிலும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால் தமிழ் இல்லாததைக் கண்டு தேர்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. 

இது இந்தியைத் திணிக்கும் முயற்சி எனவும், தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரி சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் கோஷம் எழுப்பினர். 

அதிமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் உத்தரவுகளை மீறியும் அதிமுகவினர் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கூச்சலிட்டனர். அதேபோல திமுக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜனும் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பினார். இதனால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூடிய மாநிலங்களவையில் பேசிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த ஜூலை 14-ம் தேதி ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்ட அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

அதேபோல தமிழ் உள்ளிட்ட அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE