சென்னையில் ஒரே நாளில் அரைகுறையாக சீரான சாலைகள்

சென்னையின் முக்கிய சாலைகள் பல ஜெயலலிதா வருகைக்காக ஒரே நாளில் முழு வீச்சில் இரவோடு இரவாக சீரமைக்கப்பட்டன.

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் இன்று பதவியேற்றார். தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையாகி 217 நாட்களுக்கு பிறகு, பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை ஜெயலலிதா சந்தித்தார். அவரது வருகைக்காக சென்னையின் முக்கிய சாலைகள் விழாக் கோலம் பூண்டன.

பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை காவல்துறை வியாழக்கிழமை இரவு முழு வீச்சில் செய்தது.

சாலைகளின் நடுக்கோடுகளுக்கு வண்ணம் பூசுவது, செடிகளை நடுவது, பாதசாலைகளை சரி செய்வது என இந்த அனைத்து வேலைகளையும் சென்னை மாநகராட்சி முழுவீச்சில் செய்து முடித்தது. நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4 மணியளவில் பணிகளை தொழிலாளர்கள் முடித்ததாக மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஜெயலலிதா சென்ற சாலைகள் இரவோடு இரவாக சீரமைக்கப்பட்டன. அதுவும் அரைகுறையாக ஜெயலலிதாவின் கான்வாய் செல்லும் சாலையில் ஒரு மார்க்கத்துக்கு மட்டும் கவனம் செலுத்தப்பட்டன. ஒரே இரவில் தார் சாலைகள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் பூசுவது கான்க்ரீட் பார்டர் அமைப்பது என அனைத்து பணிகளும் சாலையில் ஒரு புறம் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.

சாலையின் மறுபுறம் இருந்தவாறே குண்டும் குழியுமாக நீடிக்கிறது. சாலைகள் நெடுகிலும் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கும் விதமான தட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதனை வாலாஜா சாலை வழியே சென்ற வாகன ஓட்டிகள் கண்கூடாக பார்க்க முடிந்தது. அதேபோல, சர்தார் பட்டேல் சாலை, அவ்வை ஷண்முகம் சாலை, டிடிகே சாலை, காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை எங்கிலும் இதே நிலையாக அரைகுறையாக சாலைகள் சீரமைக்கப்பட்டன.

ஜெயலலிதா கான்வாய் சென்ற சாலைகள் மட்டும் புதுப்பிக்கப்பட்டு ஜொலித்த நிலையில், மற்ற சாலைகள் அனைத்தும் அதே கதியில் அதிகாரிகள் விட்டுச் சென்றது வாகன ஓட்டிகளை வியப்படைய வைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE