தாம்பரத்தில் ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மாரடைப்பால் இறந்தார். பேருந்தை அவர் ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத் துக்கு பணியாளர்களை அழைத் துக் கொண்டு மறைமலைநகரில் இருந்து ஒரு தனியார் பேருந்து நேற்று காலையில் வந்தது. அதில் 10-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இருந்தனர். கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தன்(31) பேருந்தை ஓட்டினார். தாம்பரம் அருகே இரும்புலியூர் மேம்பாலத்தில் பேருந்து வந்தபோது ஓட்டுநர் ஆனந்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் பேருந்தை மேம்பாலத்தின் ஓரத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினார். தனது இருக்கையில் அமர்ந்தபடியே வலியால் துடித்தார்.
அது குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என்பதால் ஓட்டுநர் உயிருக்கு போராடுவது பேருந்தின் உள்ளே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. இந்நிலையில், அந்த வழியாக காரில் வந்த ஒருவர் பேருந்தின் முன்பக்கமாக காரை நிறுத்தி செல்போனில் பேசினார். அப்போது எதேச்சையாக பேருந்து ஓட்டுநரை பார்த்து, அவர் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் விரைந்து வந்து பேருந்தில் இருந்த பொறியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் அவரே பேருந்தை இயக்கி தாம்பரத்தில் சாலை ஓரத்தில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு பேருந்தை கொண்டு சென்றார். விரைந்து வந்த மருத்துவர்கள் பேருந்துக்குள் ஏறி ஆனந்தனை சோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்திருந்தார்.
தாம்பரம் போலீஸார் விரைந்து வந்து ஓட்டுநர் ஆனந்தனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தை ஓட்டி வந்த கார் ஓட்டுநர் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். உதவும் குணம் படைத்த அந்த நபரை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர். மாரடைப்பு ஏற்பட்ட உடன் ஓட்டுநர் ஆனந்தன் உடனடியாக பேருந்தை நிறுத் தியதால் பாலத்தில் ஏற்பட இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.