நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை: வேல்முருகன் குற்றச்சாட்டு

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புத்தல் அளிக்கவில்லை. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசி தேதியான மார்ச் 1-ம் தேதிக்குள் அந்த மசோதா சட்டமாகிவிடும் என்றே மாணவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் மாணவர்கள் மிகுந்த குழப்பத்திற்குள்ளாயினர்.

குழப்பத்தின் காரணமாக வேறு வழியின்றி அவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கக்கூடும் அல்லது விண்ணப்பிக்காமல் விட்டிருக்கவும்கூடும். தமிழக ஆட்சியாளர்கள் தக்க நடவடிக்கை எடுக்காததாலும், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் உரிய அழுத்தம் கொடுக்காததாலும் இந்த குழப்பத்துக்கு காரணம்.

வரும் மே 7-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. குறுகிய காலமே இடைவெளி இருக்கும் நிலையில் மசோதா சட்டமானால் தான் தமிழக மாணவர்கள் தப்பிக்க முடியும். எனவே தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெறும் மசோதாவிற்கு சட்ட அங்கீகாரத்தை உடனடியாகவே தமிழக அரசு பெற்றிட வேண்டும்'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE