சென்னையில் 2.15 லட்சம் தெரு விளக்குகளை பராமரிக்க 680 மின் பணியாளர்கள்!

சென்னை மாநகராட்சியில் 2 லட்சத்துக்கும் அதிகமான தெரு விளக்குகள் உள்ளன. ஆனால், இவற்றை பராமரிக்கவோ வெறும் 680 மின் பணியாளர்கள் தான் உள்ளனர். தெரு விளக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பணியாளர் இல்லாததால் மின் பராமரிப்பு, பழுதுபார்ப்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மாநகராட்சி நிர்வாகம், உரிய நடவடிக்கை மேற்கொண்டு போதிய பணியாளர்களை அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அயனாவரம் சீனிவாசலு தெருவில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மர்ம நபர் திருடிச் செல்ல முயன்றார். தன்னைப் பிடிக்க வந்தவர்களைத் தாக்கிவிட்டு, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். ஆள் நடமாட்டம் இருந்த முன்னிரவு நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த தெருவில் தெருவிளக்குகள் சரியாக எரியாததே இதற்கு காரணம் என்றனர் பொதுமக்கள். பல மாதங்களாக விளக்குகள் எரியாத நிலையிலும் மாநகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினர்.

426 சதுர கி.மீ. பரப்பளவு

இங்கு மட்டுமல்ல, மாநகராட்சியின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். பழுத டையும் தெருவிளக்குகள் உடனடியாக சரி செய்யப்படுவதில்லை. இது, வழிப்பறி கொள்ளையர்களுக்கும் திருடர்களுக்கும் வசதியாகப் போய்விடுகிறது. 174 சதுர கி.மீ. ஆக இருந்த சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை இணைத்துக் கொண்டு, 426 சதுர கி.மீ. ஆக பரந்து விரிந்துள்ளது. ஆனால், விரிவாக்கத்துக்கு தகுந்தபடி பணியாளர்கள் இல்லை. மாநகராட்சியில் உள்ள சுமார் 2.15 லட்சம் தெரு விளக்குகளை பராமரிக்க வெறும் 680 மின் பணியாளர்கள்தான் இருக்கிறார்களாம். ஆள் பற்றாக்குறையால்தான் பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் அனைத்துத் துறை ஊழியர்கள் சங்க பொருளாளர் எஸ்.பாலசுந்தரம் கூறியதாவது:

மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 405 தெரு விளக்குகள் உள்ளன. இவற்றைப் பராமரித்து வரும் மாநகராட்சி மின் துறையில் மின் பணியாளர், மின் கம்பியாளர், மின் இணைப்பாளர் ஆகிய நேரடி களப்பணியாளர்களும் மின் ஆய்வாளர், இளநிலை பொறியாளர், உதவிக் கோட்டப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் போதிய அளவில் இல்லை.

தெரு விளக்குகளை பராமரிக்க 150 விளக்குகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மொத்தம் 1429 மின் பணியாளர்களும், 750 விளக்குகளுக்கு ஒருவர் என்ற வகையில் 285 மின் கம்பியாளர்களும் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 680 மின் பணியாளார்களும் 120 மின் கம்பியாளர்களும்தான் பணியில் உள்ளனர். இதனால், எல்லா தெருக்களிலும் விளக்குகளை தினமும் ஆய்வு செய்ய முடிவதில்லை.

வாரத்துக்கு ஒரு முறையோ, பத்து நாளுக்கு ஒரு முறையோதான் ஒரு தெருவுக்கு மின் பணியாளர்கள் மற்றும் மின் கம்பியாளர்கள் சென்று ஆய்வு செய்து, பழுதான விளக்குகளின் பழுதை சரி செய்ய வேண்டியுள்ளது. பொதுமக்களிடம் இருந்து வரும் தெரு விளக்குகள் தொடர்பான புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் இயலவில்லை. ஆள் பற்றாக்குறையால்தான் தெரு விளக்கு பழுதுகளை சரி செய்யும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது என்றார் பாலசுந்தரம்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘தெரு விளக்குகளைப் பராமரிக்க போதிய மின் பணியாளர்கள், மின் கம்பியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. விரைவில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், மின் துறைக்கு போதிய பணியாளர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE