ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக நடத்தை விதிகளை மீறியதாக, டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்திடம் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து, இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 'அம்மா உணவகம்' என்பதன் மூலமாக 'அம்மா' என்ற அதிமுக கட்சித் தலைவரின் பெயரை ஆளுங்கட்சி திணித்து வருகிறது என்றும், மாநகராட்சிகளால் நடத்தப்படும் இந்த உணவகங்களில் ஜெயலலிதா படமும், அம்மா உணவகம் என்ற பெயரும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.
அதிமுக தனது இரட்டை இலைச் சின்னத்தை மக்கள் நலப் பணிகளில் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள திமுக, தேர்தல் சின்னங்கள் ஆணை 1968 இந்திய அரசியல் சட்டத்தின் 364வது பிரிவு ஆகியவற்றின்படி, அதிமுக வளர்ச்சிக்காக அரசுப் பணம் தவறாகவும் முறைகேடாகவும் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அதிமுகவின் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவோ அல்லது தற்காலிகமாக நிறுத்திவைக்கவோ செய்ய வேண்டும். அத்துடன் இரட்டை இலை சின்னத்தையும் முடக்க வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் திமுக கேட்டுக்கொண்டுள்ளது.
இம்மனுவை அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, "இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அரசு லேப்டாப் மற்றும் சைக்கிள்களை இலவசமாக விநியோகித்து வருகிறது. சில திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் பணிகளையும் நடத்தி வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.