உத்தரவுகளை சரியாக செயல்படுத்தாத மின்வாரியம் மீது நடவடிக்கை: பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

மின்சார நிர்வாகம் குறித்த பல்வேறு உத்தரவுகளை சரியாக செயல்படுத்தாத மின்சார வாரியம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அக்‌ஷய்குமார், உறுப்பினர்கள் நாகல்சாமி மற்றும் ராஜகோபால் ஆகியோர் முன்னிலையில், ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் குண சேகரன் கூட்டத்தை நடத்தினார். மின்சார வாரிய தலைவர் ஞான தேசிகன், இயக்குநர்கள் அருள் சாமி, அண்ணாதுரை, சேக்கிழார் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ஜி.ராம கிருஷ்ணன் அளித்த மனுவில், “தமிழகத்தில் தற்போது மின் வெட்டு நிலவுகிறது. இதனாலும் மின் நுகர்வோர் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மின் நுகர்வோரைக் கடுமை யாகப் பாதிக்கும். கட்டண உயர்வு முடிவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கைவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கூட்டத்தில் பேசியவர்களின் முக்கியக் கருத்துகள் வருமாறு:

காசிநாதன் (சிஐடியூ)

தமிழக மின்வாரிய நிர்வாகம் சரியாக இல்லை. அதனால்தான் நஷ்டம் ஏற்படுகிறது. மின் வாரியத்தில் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும், மின் திருட்டின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதால், சாதாரண மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர்.

வி.ராமாராவ் (அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம்)

5 சதவீதத்துக்கு மேல் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அந்த உயர்வையும் அரசே மானியமாக வழங்க வேண்டும்.

காந்தி (மின் பொறியாளர் அமைப்பு)

தமிழக மின் வாரியம் தனது ஆண்டு வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில் அவர்கள் மீது, ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

கல்யாணசுந்தரம் (மின் வாரிய பொறியாளர்கள் யூனியன்)

மாதத்துக்கு 1000 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு அதிகக் கட்டணம் விதிக்க வேண்டும். சாதாரண பயன்பாட்டாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்தக்கூடாது. குறைந்த மின்னழுத்த கரண்ட் டிரான்ஸ்பார்மர் இணைப்பினருக் கும், உயரழுத்த இணைப்பைப் போல் அதிக கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். ஒரே நிறுவனம் பல பெயர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளைப் பெற்று பயன் படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

அழகர் செந்தில் (பொதுமக்கள் உரிமை விழிப்புணர்வு அறக்கட்டளை)

மின் வாரியத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதைப் போக்கிவிட்டாலே மின் வாரியத் துக்கு நஷ்டம் ஏற்படாது.

செல்வராஜ் (வெளிப்படை மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கம்):

மின் வாரியத்தில் முறைகேடு புகார்களுக்கு உள்ளான அதிகாரிகள்தான் தற்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையப் பதவிகளில் வந்து, கருத்துக் கேட்கிறார்கள். இப்படியிருந்தால், மின்வாரிய செயல்பாடுகளை எப்படி சீரமைக்க முடியும்?

ஜி.வி.நந்தக்குமார் (ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்):

மின்வாரிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடு சரியில்லை. கியாரண்டி காலம் இருக்கும், பல லட்சம் மதிப்பிலான மீட்டர்களை சமீபத்தில் பழைய பொருட்களாக சேர்க்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மின்வெட்டு பிரச்சினைகள் மற்றும் புகார்களை சரியாகக் கேட்பதில்லை. இவ்வாறு பொதுமக்களின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் அதன் உறுப்பினர் நாகல்சாமி பேசிய தாவது:

மின்சார வாரியம் ஆண்டு தோறும் வரவு, செலவுக் கணக்கு அறிக்கையை ஆணையம் முன்பு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு தாக்கல் செய்யவில்லை. அதற்கான காரணம் புரியவில்லை. கடந்த ஆண்டுகளில் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை மின்சார வாரியம் மதிக்கவில்லை. தனியாரிடம் 3.80 ரூபாய்க்கும், தனியார் ஐபிபி நிறுவனங்களிடம் 14 ரூபாய்க்கும் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டாமென்று உத்தரவிட்டோம். அவர்கள் அதைக் கேட்கவில்லை.

மின்வாரிய வரவு, செலவு விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு தர வேண்டும். ஒழுங்குமுறை ஆணையத்திலும் பதிவு செய்ய வேண்டும். எனவே, மின்சார சட்டம் 142-ன் படி, மின் வாரியத்தின் மீது விசாரணை நடத்தி, வாரியம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். இந்த விசாரணையில் அவர்களுக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE