சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "முறையான பிரயாண ஆவணங்களும், நிச்சயிக்கப்பட் வேலையும் இல்லாமல் சவூதி அரேபியாவில் குடியிருக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை, அவரவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உள்நாட்டில் வேலையில்லாத காரணத்தினால் பிழைப்புத் தேடி, ஏஜெண்டுகளுக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்து அங்கு சென்றுள்ள அப்பாவித் தமிழர்கள், தற்போது வேலையும், குடியுரிமையும், குடியிருக்க இடமும் இல்லாமல் சவூதி அரேபியாவில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவுக்குத் திரும்பி வர பயணச் செலவுகூட செய்ய முடியாமல் நிர்க்கதியாக நின்று தவித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களை உடனடியாகத் தாயகம் திருப்பிக்கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.