இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து, சர்வதேச விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா தனியாகவோ அல்லது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்தோ கொண்டுவர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: " இலங்கைப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் மீது அங்கு நடைபெறும் விசாரணைகளை கடந்த ஆண்டு நேரில் ஆய்வு செய்த ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, அவரது இறுதி அறிக்கையை ஐ.நா. மனிதப் பேரவையில் அடுத்த மாதம் 26 ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார்.

முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ள அவரது அறிக்கையில், இலங்கை அரசு நடத்திய போர்க்குற்ற விசாரணை ஐ.நா.வுக்கு திருப்தியளிக்கவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் குற்றச்சாற்றை உறுதி செய்யும் வகையிலேயே ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் இறுதி அறிக்கையும் அமைந்திருக்கிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமான வசதிகளை செய்து தருவதில் ஓரளவு முன்னேற்றம் எட்டப்பட்டிருக்கும் போதிலும், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா.வின் கோரிக்கையை நிறிவேற்றும் வகையிலோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையிலோ எந்த நடவடிக்கையையும் இலங்கை மேற்கொள்ளவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை மீதான போர்க் குற்றச்சாற்றுகளுக்கு புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தால், அவர்கள் சர்வதேச விசாரணை அமைப்பின் முன் நேர்நின்று சாட்சியமளிக்க முன்வருவார்கள் என்று கூறியுள்ள நவநீதம் பிள்ளை, இலங்கை நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு ஆணையிடும்படி ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

எனவே, இலங்கை அரசு மீதான போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாற்றுகள் குறித்து நேர்மையான, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் 25 ஆவது கூட்டத்தில் இந்தியா தனியாகவோ அல்லது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்தோ கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE