புதிதாக வங்கியில் சேரும் ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

புதிதாக வங்கியில் சேரும் ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய இந்தியன் வங்கியின் ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத்தின் 4-வது மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் பேசியதாவது:

தற்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பது சிதைந்து, தனிக் குடும்ப முறை அதிகரித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா போன்று பெற்றோர்களைக் கவனிப்பதில் நாம் மோசமான நிலைக்குச் சென்றுவிடவில்லை. இருப்பினும், மூத்த குடிமக்கள் அல்லது பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஓய்வூதியம் அவசியமாகிறது. கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த லட்சக்கணக்கான பொதுத்துறை வங்கி ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது ஏராளமான இளைஞர்கள் வங்கிப் பணிகளில் சேருகின்றனர். அவர்களுக்கு சில நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டாலும், உரிய வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.சுந்தரராஜன் பேசியதாவது:

வாராக்கடன் உள்ளிட்ட பிரச்சினைகளால் பொதுத்துறை வங்கிகள் சந்தித்துவரும் நெருக் கடிகள் இன்னும் ஓராண்டுக்கு மேல் நீடிக்காது. பொருளாதாரம் நிலை மேம்படும்போது, வங்கிகளின் செயல்பாடும் நன்றாக இருக்கும்.

பொதுத்துறை வங்கிகள் 60 வயதானவர்களுக்கு ஓய்வு அளித்துவிடுகின்றன. அவர்களின் அனுபவத்தை கருத்தில்கொண்டு அவர்களை தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்துகின்றன. எனவே, அவர்களின் அனுபவத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள, ஓய்வுபெற்ற ஊழியர்களையும் சில பணிகளுக்காக பொதுத்துறை வங்கிகள் நியமிக்கலாம் என்றார்.

மாநாட்டில், இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் எஸ்.கிருஷ்ணன், இந்தியன் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இ.அருணாச் சலம், அகில இந்திய இந்தியன் வங்கியின் ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத்தின் தலைவர் பி.சந்திரபோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE