ஜல்லிக்கட்டு போராட்டம்: போலீஸ் நடவடிக்கை; தமிழக நிலவரம்

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.

சென்னை மெரினாவில் போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டனர். எஞ்சியுள்ள போராட்டக்காரர்கள் கடலுக்கு அருகே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராயப்பேட்டையிலும், போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். சென்னை அவ்வை சண்முகம் சாலையில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

இதற்கிடையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் கூடியிருக்கும் போராட்டக்காரர்களிடம் போலீஸ் உயரதிகாரிகள் போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதேபோல், அலங்காநல்லூரிலும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் போராட்டக்காரர்கள் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருத்தணியில் போலீஸார் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு இளைஞர்கள், மாணவர்கள் கலைந்து சென்றனர்.

ஈரோட்டில் போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் 5 நாட்களாக நடந்துவந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ராமநாதபுரத்தில் போராட்டம் வாபஸ்

ஜல்லிக்கட்டு கோரியும், பீட்டாவுக்கு தடை கோரியும் ராமநாதபுரத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர். போலீஸார் சமாதானத்தை ஏற்ற போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் கைகுலுக்கிவிட்டு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையில் ஜல்லிக்கட்டு கோரி உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. வ.உ.சி. மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அதேவேளையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்லில் 350 பேர் கைது

திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 350 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE